1983-ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட சிலிக்கான் வேலி வங்கி, படிப்படியாக வளர்ச்சி கண்டு தற்போது மிகப்பெரிய அமெரிக்க வங்கிகளில் ஒன்றாகவும் நாட்டின் 16-வது பெரிய வங்கியாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு கூட ரூ.17 லட்சம் கோடி வரை சொத்து வைத்து நல்ல நிலையிலேயே திகழ்ந்தது.
ஆனால், அதன்பின்னர் பணவீக்கம் அதிகரித்த நிலையில், பெரிய அளவில் வராகடனில் சிலிக்கான் வங்கி சிக்கிக்கொண்டது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட தனது மொத்த கடன் பத்திரங்களை ரூ.14,000 கோடி நஷ்டத்தில் வேறு வழியின்றி விற்றிருப்பதாக கடந்த வாரம் அறிவித்த நிலையில், அதன் பங்குகள் சுமார் 69% வீழ்ச்சியை சந்தித்தன.
இது குறித்த தகவல் பரவியதும் பொதுமக்கள் சிலிக்கான் வங்கியில் தாங்கள் வைத்திருந்த டெபாசிட் பணத்தை எடுக்க திரண்டனர். 48 மணி நேரத்தில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.25 லட்சம் கோடி டெபாசிட் பணத்தை நிறுவனங்களும் பொதுமக்களும் வங்கியில் இருந்து எடுத்த நிலையில், தற்போது வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை மீண்டும் ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தற்போது சிலிக்கான் வேலி வங்கி திவாலாகியுள்ள நிலையில், அதனை பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிலிக்கான் வேலி வங்கியின் பிரிட்டன் பிரிவை வெறும் 1 பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் 100 ரூபாய் ) எச்.எஸ்.பி.சி வங்கி (HSBC Bank) கையகப்படுத்தியுள்ளது.
சிலிக்கான் வேலி வங்கியின் பிரிட்டன் பிரிவில் மட்டும் 6.7 பில்லியன் பவுண்ட் மதிப்புள்ள டெபாசிட்டுகள் இருக்கும் நிலையில், 5.5 பில்லியன் பவுண்ட் கடன்களையும் வழங்கியுள்ளது. எனினும் முதலீட்டாளர்களை டெபாசிட்டை திருப்பகொடுக்கும் அளவு சிலிக்கான் வேலி வங்கியிடம் பணம் இல்லாத நிலையில், வேறு வழியின்றி எச்.எஸ்.பி.சி வங்கியிடம் தனது கிளைகளை முழுமையாக கொடுத்துள்ளது. ஒரு மிகப்பெரிய வங்கியை வெறும் 1 பவுண்டுக்கு வாங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.