அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் ஓங்கி நிற்பதாக பல்வேறு ஊடகங்களும் விமர்சித்து வருகிறது. அங்குள்ள மக்கள் தங்கள் பாதுகாப்பு கருதி துப்பாக்கியை தங்கள் வீட்டில் வைத்துகொள்வர். ஆனால் அந்த வீட்டு குழந்தைகள் சில நேரத்தில் இதனை விளையாட்டு பொருளாக கருதி விளையாடுவர்.
மேலும் சில நேரங்களில் குழந்தைகள் பள்ளி வரைக்கும் எடுத்து சென்று விபரீதங்களை நடந்துள்ளது. குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இதுபோன்ற ஆபாத்தான ஆயுதங்களை பெற்றோர் சரியாக கையாளா விட்டால், பல விபரீதங்கள் நேரும். அப்படி ஒரு சம்பவம் தான் இப்பொது அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஹாரிஸ் கவுண்டியில் குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது. இங்கு 3 மற்றும் 4 வயதில் சிறு குழந்தைகள் உள்ளனர். அந்த வீட்டில் குழந்தைகளுடன் சேர்த்து மொத்தம் 7 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் வார விடுமுறையை கொண்டாடிக்கொண்டிருந்தனர்
அப்போது இந்த வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் அங்கிருந்த செமி-ஆட்டோமேட்டிக் ரக கைத்துப்பாக்கியை எடுத்து வைத்து சுடுவதுபோல் சைகை காட்டி விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அந்த 3 வயது குழந்தை, தனது சகோதரியான 4 வயது குழந்தையை நோக்கி துப்பாக்கியை கொண்டு சைகை காட்டியுள்ளார்.
அப்போது திடீரென அந்த துப்பாக்கியில் இருந்து குண்டு அந்த 4 வயது சிறுமி மீது பாய்ந்தது. துப்பாக்கி சத்தத்தை கேட்ட குழந்தைகளின் குடும்பத்தார் பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்து பார்த்தனர். அப்போது அவர்களது 4 வயது சிறுமி இரத்த வெள்ளத்தில் தரையில் சுருண்டு கிடந்தார். பின்னர் அந்த சிறுமியை எழுப்பி பார்த்தபோது, அசைய கூட இல்லை. இதையடுத்து சிறுமியை சோதனை செய்தபோது, உயிரிழந்தது தெரியவந்தது.
தொடர்ந்து இதுகுறித்து அம்மாகாண காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வார விடுமுறையை கழிக்க குடும்பத்தோடு சென்றபோது, கவனக்குறைவால் 4வயது குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோல் பல சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், கடந்த ஆண்டே இதே மார்ச் மாதத்தில், தெலங்கானா மாநிலத்தில் 17 வயது சிறுவன் தோட்டத்திற்கு வரும் குரங்குகளை விரட்ட ஏர்கன் துப்பாக்கியால் சுட்டதில் 4 வயது சிறுமியின் தலையில் குண்டு பாய்ந்து, சம்பவ இடத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.