உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான மெயில் அனுப்பப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டு நிலையில், எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.அதைத் தொடர்ந்து ட்விட்டர் ஊழியர்களை நேரடியாக சந்தித்த எலான் மஸ்க், வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்றும், முன்புபோல அலுவலகத்தில் இலவசமாக உணவு போன்ற எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாது என்று கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், டிவிட்டரின் சான்பிரான்சிஸ்கோ தலைமை அலுவலகத்தில் ஊழியர்களின் ஒரு வருட உணவுக்கு ரூ.100 கோடி செலவிடப்படுவதாகவும் இதனால் இலவச உணவு சலுகையை ரத்து செய்தேன் என்றும் பதிவிட்டுள்ளார்.அதோடு சிக்கன நடவடிக்கையின் ஒருபகுதியாக கழிவறையில் பயன்படுத்தும் டாய்லெட் பேப்பர் இனி ட்விட்டர் அலுவலகத்தில் வைக்கப்படாது எனவும் எனவே இனி ஊழியர்களே டாய்லெட் பேப்பரை அலுவலகத்துக்கு எடுத்துவரவேண்டும் என்றும் சமீபத்தில் எலான் மஸ்க் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது வாடகை கொடுக்காத நிலையில், ட்விட்டர் அலுவலகம் மூடப்பட்டுள்ள சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. சிங்கப்பூரில் ட்விட்டர் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்துள்ளது. அந்த கட்டிடத்துக்கு வாடகை கொடுக்கப்படாத நிலையில் கட்டிட உரிமையாளர் ட்விட்டர் ஊழியர்களை வெளியேற்றி அந்த கட்டிடத்தை மூடியுள்ளார். இது குறித்த தகவலை எலான் மஸ்க்குக்கு தெரிய படுத்திய நிலையில், ஊழியர்களை கட்டிடத்துக்கு வெளியே இருந்தே வேலை செய்ய கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.