கொசுக் கடியால் நமக்கு அப்படி என்ன பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடப் போகிறது என்று நாம் எல்லோரும் அலட்சியமாக இருக்கலாம். அப்படியே இருந்தாலும் டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் நோய்கள் தான் ஏற்படும். ஆனால் ஜெர்மனியில் கொசுக் கடித்ததால் இளைஞர் ஒருவர் ஒரு மாதம் கோமாவிற்கு சென்று மீண்டு வந்துள்ள சம்பவம் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த செபாஸ்டியன் ரோட்ஸ்கே என்ற இளைஞரை கொசு கடித்துள்ளது. இதனால் அவரது ரத்தத்தில் விஷம் கலந்து கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் செயலியந்துள்ளது. இதனால் அவர் கோமாவிற்கு சென்றுள்ளார்.
பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் 30 அறுவை சிகிச்சைகளைச் செய்து அவரை பிழைக்க வைத்துள்ளனர். தற்போது உடல் நலம் பெற்றுத் தொடர் சிகிச்சையிலிருந்து வருகிறார்.
இது குறித்துக் கூறும் செபாஸ்டியன் ரோட்ஸ்கே, "நான் இங்கேதான் இருகிறேன். வெளியூர் எங்கும் செல்லவில்லை. இங்குதான் என்னைக் கொசு கடித்துள்ளது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் தற்போது நான் உயிர் பிழைத்துள்ளேன்.
இதற்குக் காரணம் ஆசியப் புலி கொசு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்போதுதான் மெல்லக் குணமடைந்து வருகிறேன்" என தெரிவித்துள்ளார். காடு கொசுக்கள் என்றும் அழைக்கப்படும் ஆசிய புலி கொசுக்கள், கிழக்கு குதிரை மூளை அழற்சி (EEE), ஜிகா வைரஸ், மேற்கு நைல் வைரஸ், சிக்குன்குனியா மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற தீங்கு விளைவிக்கும் நோய்களைப் பரப்பக் கூடியவை என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.