உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்கின் நிறுவனம் தான் டெஸ்லா. அமெரிக்காவின் எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லா, சர்வதேச அளவில் எலக்ட்ரிக் வாகன பிரிவில் முக்கிய இடம் வகித்து வருகிறது.
பிற நிறுவனங்கள் பெட்ரோலிய வாகனங்கள் உருவாக்குவதில் மும்முரமாக இருந்த நிலையில், மின்சார வாகன உற்பத்தியை தொடங்கி இப்போது அந்த துறையில் பிற நிறுவனங்கள் தொடமுடியாத உச்சத்தில் டெஸ்லா நிறுவனம் இருக்கிறது. அதுமட்டுமின்றி எலான் மஸ்கை உலகபணக்காரர் ஆகியதில் டெஸ்லா நிறுவனத்துக்கு முக்கிய பங்குண்டு.
தனது கார்களில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி அதன்மூலம் வடிக்கையாளர்களிடையே நன்மதிப்பை பெற்றுவருகிறது. அதோடு ஓட்டுநர் இல்லா வாகன தொழில்நுட்பத்திலும் முன்னிலையில் இருக்கிறது டெஸ்லா நிறுவனம்.
இப்படிபட்ட டெஸ்லா சில மாதங்களுக்கு முன்னர் மாடல் 3 மற்றும் மாடல் y ரக கார்களை அறிமுகம் செய்தது. இந்த ரக கார்கள் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், அதில் சில தொழில்நுட்ப குறைகள் இருப்பதாக புகார் எழுந்தது. அதிலும் பல வாடிக்கையாளர்கள் பின்பக்க விளக்கு எரியவில்லை என டெஸ்லா நிறுவனத்திடம் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், தொடர்ந்து வந்த புகார்களைத் தொடர்ந்து மாடல் 3 மற்றும் மாடல் y ரக கார்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை தான் வெளியிட்ட 3.21 லட்சம் திரும்பப்பெறுவதாக அந்நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த ரக கார்களில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் டெஸ்லா நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.