உலகத்தின் பாதி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்த உலகக்கோப்பை கால்பந்து தொடர் நேற்று இரவு கோலாகலமாக கத்தாரில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஈக்வேடார் - கத்தார் அணிகள் மோதின. இதில் 2-0 என்ற கணக்கில் ஈக்வேடார் அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து 2வது நாளான இன்று ஒரேநாளில் மூன்று போட்டிகள் நடைபெறுகிறது. இங்கிலாந்து - ஈரான், செனகல் -நெதர்லாந்து, அமெரிக்கா - வேல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஒருபுறம் கால்பந்து உலக கோப்பையை ரசிகர்கள் கொண்டாடு துவங்கி விட்டாலும், கத்தாரை சுற்றி வெளியாகும் சர்ச்சை கருத்துகள் ரசிகர்களைக் கலக்கமடையவே செய்கிறது.
முதலில் பாலியல் உறவு மற்றும் மதுபானங்களுக்குத் தடை போன்ற செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் போட்டி நடத்தும் கத்தார் நிர்வாகம் மற்றும் வீரர்கள் என பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்காக வேலையில் ஈடுபட்ட 6000 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான உரிமையை 2010ம் ஆண்டு கத்தார் நாடு பெற்றது. அதிலிருந்தே போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகள் நடைபெற்றது. கத்தாரில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் குளிர்காலத்தில் போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது மேலும் வெப்பத்தைக் குறைக்கும் வகையில் மைதானங்கள், வீரர்கள் தங்கும் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த உலகக் கோப்பைக்காக புதிய நகரமே அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் மட்டும் கிட்டத்தட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் இந்தியா, வங்கதேசம், நேபாளம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்துதான் அதிகமான தொழிலாளர்கள் வேலைபார்த்துள்ளனர்.
இந்நிலையில் 2010ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகலாக கால்பந்து தொடருக்காக உருவாக்குவதற்காக பணியாற்றி வந்த 6000 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தி கார்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்ட உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் கடுமையான வெத்தில் கூட தொழிலாளர்களை 12 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கியதன் காரணமாகவே தொழிலாளர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்குப் போட்டியை நடத்தும் கத்தார் நாடும், FIFA நிர்வாகமும் எந்த ஒரு விளக்கத்தையும் இதுவரை கொடுக்கவில்லை.
இதனால் தி கார்டியன் அறிக்கை உண்மையாக இருக்கக் கூடுமோ என அஞ்சப்படுகிறது. அதேபோல் கத்தாரில் போட்டி நடத்துவது என்ற அறிவிப்பு வந்த உடனே பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக முன்னாள் FIFA தலைவர் செப் பிளாட்டர் கத்தாரில் போட்டி நடத்துவது என்பது தவறெனமுடிவு என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.