அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்வது மக்களுக்கு அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. உணவு முதல் வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருளையும் எளிதில் வாங்க முடியும் என்பதால் பலரின் முதல் தேர்வாக இ -காமர்ஸ் தளங்கள் உள்ளது.
அதேநேரம், இ -காமர்ஸ் தளங்கள் மக்களுக்குப் பயனுள்ளதாக இருந்தாலும் சில நேரங்களில் நாம் ஆர்டர் செய்த பொருட்களுக்குப் பதில் வேறு ஒரு பொருள் டெலிவரி ஆகும் சம்பவங்களும் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் ஜீன்ஸ் பேண்ட் ஆர்டர் செய்த பெண்ணுக்கு பை நிறைய வெங்காயம் டெலிவரியான சம்பவ அனைவரையும் பீதியடைய வைத்துள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைனில் செகண்ட் ஹேண்ட் ஜீன்ஸை ஆர்டர் செய்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு டெலிவரியான பையில் ஜீன்ஸ் பேண்டுக்கு பதில் நிறைய வெங்காயம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே ஆர்டர் செய்த இ- காமர்ஸ் தளத்தைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.
இதற்கு அவர்கள், "ஜீன்ஸ் பேண்ட்டிற்கு பதில் வெங்காயம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. உங்கள் சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்" என தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆர்டர் செய்த ஜீன்ஸ் பேண்டுக்கு பதில் பை நிறைய வெங்காயம் வந்த சம்பவம் இ -காமர்ஸ் தளத்தை பயன்படுத்துபவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.