நாம் உடை மாற்றும் போது அலட்சியமாக இருக்கக் கூடாது. அதேபோல் ஷூ போன்ற காலணிகளை அணியும் போதும் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும். நம் வீடுதானே என்று இருந்துவிட்டால் அது நமக்கு சில நேரத்தில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இதற்குக் காரணம், நமக்கே தெரியாமல் நமது உடை, காலணிகளில் தேள், பாம்பு போன்றவை அதனுள் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மழைக் காலத்தில் நாம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இந்நிலையில் பிரேசில் நாட்டில் ஷூவுக்குள் மறைந்திருந்த கொடிய விஷம் கொண்ட மஞ்சள் நிற தேள் கடித்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த சிறுவன் லூயிஸ்.
இவர், கடந்த வாரம் இறுதியில் வெளியே செல்வதற்காகத் தனது காலணிகளை அணிந்துள்ளார். அப்போது காலில் ஏதோ கடித்துள்ளது. உடனே சிறுவன் மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவன் அணிந்திருந்த ஷூவை கழட்டியபோது அதற்குள் இருந்து கொடிய விஷம் கொண்ட மஞ்சள் நிற தேள் வெளியே வந்து ஓடியுள்ளது.
பிறகு சிறுவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு இரண்டு நாட்களுக்குச் சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு 7 முறை மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரேசில் மற்றும் தென் அமெரிக்காவின் பிற பகுதிகளில் தேள் கடியால் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 2000ம் ஆண்டு தேள் கடியால் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2018ம் ஆண்டில் 15,600 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.