ரஷ்யா - உக்ரைன் இடையேயான 7 மாத போர் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக்கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரை தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜோன் ஆஃப் ஆர்க்" என்று அழைக்கப்படும் உக்ரேனிய துப்பாக்கி சுடும் வீரரான எமரால்டு எவ்ஜெனியா சக போர் வீரர் எவ்ஜெனிக் ஸ்டிபன்யுக் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் உலக அளவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கிய நிலையில், போர்க்களத்தில் இருவரும் சந்தித்துள்ளனர். போர் களத்தின் மத்தியில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.அதைத் தொடர்ந்து இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
திருமணத்தின்போது மணமகன் ராணுவ உடை அணிந்த நிலையில், மணமகள் பார்ப்பரிய வெள்ளை நிற உடையை அணிந்திருந்தார். ஆனால், வழக்கமாக மணமகள் கையில் பூங்கொத்தை வைத்திருக்கும் நிலையில், போரினால் நிலவும் வறுமையை குறிக்கும் விதமாக மணமகள் கையில் கோதுமை கதிர்களை வைத்திருந்தார். இவர்களது திருமணம் தற்போது வைரலாகி வருகிறது.