பொதுவாக மனிதர்கள் யாரேனும் காணவில்லை என்றால் விளம்பரம் செய்வது வழக்கம். அது காலப்போக்கில் மாறி, ஆடு மாடு போன்ற வீட்டு விலங்குகள் காணாமல் போனாலும் விளம்பரம் கொடுத்து வருகின்றனர். அண்மையில் கூட ஒரு ஹாலிவுட் மாடல் நடிகை தனது செல்ல நாயை காணவில்லை என்றும், கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இது போன்று வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை காணவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுத்து கண்டுபிடிக்க வேண்டும் என்று பலரும் முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒருவர் தனது செல்ல பிராணியான பாம்பை அதுவும் மலைப்பாம்பை காணவில்லை என்றும், கண்டுபிடித்து தருமாறும் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.
கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஓக் பே என்ற பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர், தனது வீட்டில் செல்ல பிராணியாக பாம்பை வளர்த்து வந்தார். இவர் வளர்த்து வந்த பாம்பானது ball python- என்ற மலைப்பாம்பு வகையாகும்.
எனவே மீனுக்கென்று தனியாக மீன் தொட்டி போன்று, இந்த பாம்புக்கென்று தனியாக கண்ணாடி கூண்டு அமைத்து பராமரித்து வந்துள்ளார். சுமார் 3 அடி நீளம் உள்ள இந்த பாம்பு ஆப்பிரிக்க நாடுகளின் வனப்பகுதியில் அதிகமாக காணப்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த பாம்பானது அதன் கண்ணாடி கூண்டிலிருந்து எப்படியோ தப்பியோடிவிட்டது. இதையடுத்து கண்ணாடி கூண்டை பார்த்த அதன் முதலாளி, பாம்பை காணவில்லை என்று பதறிபோயுள்ளார். பின்னர் அதனை வீடு முழுக்க சுற்றி தேடியுள்ளார். மேலும் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார்.
இருப்பினும் அதனை காணவில்லை என்பதால் மிகவும் கவலைக்குள்ளாகியுள்ளார். இதையடுத்து தனது பாம்பை காணவில்லை என்று காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த அவர்கள், பாம்பை தேடினர். ஆனால் அது எங்கேயும் கிடைக்கவில்லை .
இதையடுத்து தங்கள் ட்விட்டர் பக்கத்தில் காணாமல் போன பாம்பு பற்றிய விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் "இந்த பாம்பு சுமார் 3 பவுண்டுகள் (1.36 கி,கி) எடை கொண்டது. விஷத்தன்மை இல்லாத இந்த பாம்பு சமீபத்தில்தான் உணவு உட்கொண்டது. அதற்கு கூர்மையான பற்கள் எதுவும் கிடையாது. இந்த பாம்பை யாரேனும் கண்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்" என்று பகிர்ந்துள்ளனர்.