சமீப காலமாக விமானங்களுக்கு போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக எதிர்பாராத அதிர்ச்சி, தாமதம் போன்ற செயல்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அதுபோன்ற ஒரு சம்பவம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு நடந்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்தது. இந்த விமானத்தில் 209 பயணிகள் மற்றும் இதற விமான பணியாளர்கள் இருந்துள்ளனர்.
இந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது பயணி ஒருவர் தனது பையில் வெடிகுண்டு உள்ளதாக விமான பணிப்பெண்களிடம் கூறியுள்ளார். இதனால் விமானத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. மேலும் அந்த பயணி ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டு ஒருவரை தாக்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து விமான ஊழியர்கள் அவரை பிடித்து சோதனை நடத்தியதில் அவரிடம் எந்த வெடிகுண்டும் இல்லை என்பது தெரியவந்தது. இதன் பின்னரே பயணிகள் நிம்மதி அடைந்தனர். இதனிடையே விமானத்தில் நடந்த வன்முறை தொடர்பாக விமானத்தில் பைலட் விமான கட்டுப்பாடு அறையை தொடர்புகொண்டு சம்பவத்தை கூறியுள்ளார்.
அதன்பின்னர் இந்த விவரம் ராணுவத்துக்கு தெரியப்படுத்தப்பட்டு சிங்கப்பூர் விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள், பயணிகள் விமானத்தை பாதுகாப்புடன் விமான நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் அந்த பயணி விமான நிலைய போலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.