"தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்.." என்ற பாரதியார் வரிகளுக்கு ஏற்ப துபாய் அரசு ஒரு அருமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், வெளிநாடுகளில் இருந்து பணிபுரிந்து வருபவர்கள் ஏராளம்.
அதிலும் குறிப்பாக வாகன ஓட்டுநர்கள், டெலிவரி வேலை, கட்டட வேலை, குப்பை அள்ளுதல் உள்ளிட்ட வேலைகளுக்கே அவர்களை பயன்படுத்தி வருகின்றனர். மற்ற நாடுகளில் இருந்து அங்கு வேலைக்கு செல்பவர்கள் தாங்கள் பட்டினியாக இருந்து, பணத்தை சேமித்து தங்கள் குடும்பத்திற்கு அனுப்புகின்றனர். இவர்கள் சில நேரங்களில் நாள் முழுக்க கூட சாப்பிடாமல் இருக்கின்றனர்.
காலகாலமாக இந்த அவல நிலையை முழுமையாக போக்க வேண்டும் என்று பல வருடங்களாக அந்நாட்டு அரசு முயன்று வந்தது. அதன்படி அந்நாட்டின் மன்னரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம் ஒரு திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தார்.
அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது துபாயில் ஏழை மக்களுக்கு உணவு அளிக்கும் வகையில் 'வெண்டிங் மிஷின்' என்று சொல்லப்படும் உணவு இயந்திரங்கள் துபாய் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. இந்த உணவு இயந்திரங்கள் கடந்த 17-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தன.
துபாயின், 'அஸ்வாக்' மளிகை கடைகளின் வாயிலில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், அரபி ரொட்டி மற்றும், 'பிங்கர் ரோல்' ஆகிய இரண்டு வகை உணவுகள், சுடச்சட தயாரிக்கப்பட்டு ஒரு நிமிடத்தில் அளிக்கப்படுகின்றன. இந்த இலவச உணவு திட்டத்துக்கு தனிநபர்களும் நன்கொடை அளிக்கலாம். துபாய் அரசின் இந்த புதிய திட்டத்திற்கு அந்நாட்டு மக்களும், வெளிநாட்டு மக்களும் வாழ்த்துக்களும் வரவேற்பும் அளித்து வருகின்றனர்.