பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் சில நாட்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.
இவரின் மறைவை அடுத்து உலக தலைவர்கள் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.ராணி எலிசபெத் இறந்ததையடுத்து பிரிட்டன் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கிறது. மேலும் அந்நாட்டு மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன்பு குவிந்து வருகின்றனர்.
அவரின் இறுதி சடங்கு வரும் 19ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் உலகத்தலைவர்கள் பலர் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவ்வாறு வரும் தலைவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரிட்டனின் வெளிநாட்டு மற்றும் பொதுநல மேம்பாட்டு அலுவலகம் தூதரகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் விவரம் வருமாறு:
முக்கிய தலைவர்கள் தனி விமானங்கள், ஹெலிகாப்டர்களில் வருவதை தவிர்த்து பயணிகள் விமானத்தில் வரும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு அவர்கள் வரும்போது தங்களது அரசுக்கு சொந்தமான கார்களில் வராமல், மேற்கு லண்டனில் இருந்து பேருந்தில் வர வேண்டும்.
இறுதி சடங்கு மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளில் இட நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க, நாட்டின் மூத்த பிரதிநிதி மற்றும் அவரது மனைவிக்கு மட்டுமே இடம் ஒதுக்கப்பட உள்ளது. அதுதவிர அரசு விருந்தினரின் குடும்பத்தினர், ஊழியர்கள் அல்லது குழுக்களுக்கு அனுமதி கிடையாது. பங்கேற்க முடியாத தலைவர்கள் தங்களது அரசின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக மூத்த அமைச்சர்களை அனுப்பலாம் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.