பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் சில நாட்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.
இவரின் மறைவை அடுத்து உலக தலைவர்கள் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.ராணி எலிசபெத் இறந்ததையடுத்து பிரிட்டன் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கிறது. மேலும் அந்நாட்டு மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன்பு குவிந்து வருகின்றனர்.
உலகிலேயே நீண்ட ஆண்டுகள் பிரிட்டனை ஆட்சி செய்த 2வது ராணி என்ற பெருமையை எலிசபெத் பெற்றுள்ளார். 1953ம் ஆண்டு மன்னர் 6ம் ஜார்ஜ் மறைவுக்குப் பிறகு இவர் ராணியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சூரியன் மறையாத தேசமாக இருந்த பிரிட்டன் இரண்டு உலக போரின் காரணமாக அதன் காலணிகளை இழந்து பல்வேறு நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்தது. ஆனால், இப்போதும் கனடா, ஆஸ்திரேலியா, ஜமைக்கா உள்ளிட்ட 15 நாடுகள், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தைத் தங்களது நாட்டின் தலைவராகக்கொண்டு செயல்பட்டுவருகின்றன.
கடந்த ஆண்டு கரீபியன் கடல் பகுதியையொட்டி அமைந்திருக்கும் மேற்கிந்தியத் தீவுகளின் பிராந்திய நாடு பார்படோஸ் நாடு தங்கள் நாட்டின் தலைவர் பதவியிலிருந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை நீக்கிவிட்டு, புதிய குடியரசு நாடாக தன்னை அறிவித்தது.
இந்த நிலையில், தற்போது ராணி இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் பிரிட்டன் மன்னரின் அதிகாரத்தை தாண்டி தங்களை குடியரசாக பல்வேறு நாடுகளும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும், கரீபியன் நாடுகளான பெர்முடா, ஆண்டிகுவா போன்ற நாடுகள் பிரிட்டன் மன்னரின் அதிகாரத்தை தொடரலாமா அல்லது குடியரசாக மாறலாமா என வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளன. அதேநேரம் ஆஸ்திரேலியா,கனடா,நியூஸிலாந்து போன்ற நாடுகள் புதிய மன்னர் சார்லசை தங்கள் மன்னராக ஏற்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.