பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் சில நாட்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.
இவரின் மறைவை அடுத்து உலக தலைவர்கள் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.ராணி எலிசபெத் இறந்ததையடுத்து பிரிட்டன் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கிறது. மேலும் அந்நாட்டு மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன்பு குவிந்து வருகின்றனர்.
உலகிலேயே நீண்ட ஆண்டுகள் பிரிட்டனை ஆட்சி செய்த 2வது ராணி என்ற பெருமையை எலிசபெத் பெற்றுள்ளார். 1953ம் ஆண்டு மன்னர் 6ம் ஜார்ஜ் மறைவுக்குப் பிறகு இவர் ராணியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் ராணியின் கடிதம் குறித்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ராணி இரண்டாம் எலிசபெத் நவம்பர் 1986ல் ஒரு முறை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியின் மேயருக்கு ராணி தன் கைப்பட ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தின் முன்னுரையில் "வாழ்த்துக்கள். கி.பி. 2085 ஆம் ஆண்டில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பொருத்தமான நாளில், தயவுசெய்து இந்த உறையைத் திறந்து சிட்னியின் குடிமக்களுக்கு எனது செய்தியை அவர்களுக்குத் தெரிவிப்பீர்களா?" என்று கூறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக ராணியின் கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை அறிய கி.பி. 2085 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. மேலும், ஆஸ்திரிலேயாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ராணி விக்டோரியா கட்டிடத்தில் இந்த கடிதம் ரகசியமாக வால்ட்டில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடிதத்தின் எழுதியுள்ள விஷயங்களை பொதுமக்களுக்கு எப்போது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.