அர்ஜெண்டினா நாட்டின் துணை அதிபராக இருப்பவர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும் பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இருப்பினும் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் மறுத்து வருகிறார். மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலிலும் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் போட்டியிட உள்ளார்.
இந்நிலையில் வழக்கு ஒன்றில் விசாரணைக்காக நீதிமன்றம் ஆஜராகிவிட்டு புவெனோஸ் அய்ரோஸ் நகரில் உள்ள தனது இல்லத்திற்கு கிறிஸ்டினா பெர்னாண்டஸ் வந்துள்ளார். அப்போது அங்கு அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர்.
அப்போது காரில் இருந்து வெளியே வந்த அவர் தனது ஆதரவாளர்களை பார்த்து கை அசைத்து அவர்கள் அருகே சென்றார். அப்போது அங்கிருந்து மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து அவரை சுட முயன்றார். ஆனால் துப்பாக்கி வேலை செய்யவில்லை.இதனால் அவர் உயிர் தப்பியுள்ளார்.
உடனே அங்கிருந்தவர்கள் அந்த நபரைப் பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் வைத்திருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர். இதில் 5 தோட்டாக்கள் இருந்துள்ளது. மேலும் அந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அர்ஜெண்டினா விடுதலை அடைந்த பிறகு நடந்த மிக மோசமான கொலை முயற்சி சம்பவம் என அந்நாட்டு அதிபர் அல்பெர்டோ பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர்மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.