உலகம்

குடியுரிமை பெற்ற முதல் ரோபோட்.. மனிதன் போலவே சிந்திக்கும் சோஃபியாவை பற்றி தெரியுமா ?

சோஃபியாவுக்கு மனிதர்களை போல் நகைச்சுவை உணர்வு இருக்கிறது. சிரிப்பு துணுக்கு ஒன்றை சொல்லி அவ்வப்போது சிரித்துக் கொள்கிறாள்.

குடியுரிமை பெற்ற முதல் ரோபோட்.. மனிதன் போலவே சிந்திக்கும் சோஃபியாவை பற்றி தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

அக்டோபர் 25 2017.

மனித குல வரலாற்றின் முக்கியமான நாள். சவுதி அரேபிய அரசு சோஃபியாவுக்கு குடியுரிமை கொடுத்த நாள்.

எத்தனையோ பேருக்கு உலக நாடுகள் குடியுரிமை வழங்குகிறது. பல நாடுகள் குடியுரிமைகளை மறுக்கும் சோகங்களும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சோஃபியாவுக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் என்ற கேள்வி எழலாம்.

சோஃபியா மனித உயிர் அல்ல என்பதே முக்கியத்துவம்!

சோஃபியா, பெண்ணை போல் தோற்றம் கொடுக்கும் ஒரு ரோபோ. இயந்திரப்பெண்!

டேவிட் ஹேன்சன் என்பவரின் கற்பனையில் உருவானவளே சோஃபியா. ஹேன்சன் ரோபாட்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பு.

சோஃபியாவுக்கு மனிதர்களை போல் நகைச்சுவை உணர்வு இருக்கிறது. சிரிப்பு துணுக்கு ஒன்றை சொல்லி அவ்வப்போது சிரித்துக் கொள்கிறாள். மனிதர்களின் கண்களை பார்த்து பேசுகிறாள். மனிதர்களை போல் உணர்வுகளும் தனக்கு இருப்பதாக சொல்கிறாள். கோபம், வருத்தம் போன்ற உணர்வுகள் தன்னை அவ்வப்போது வாட்டுவதுண்டு என்கிறாள். எப்படி சோஃபியாவால் உணர்வுகளை வெளிகாட்ட முடிகிறது?

குடியுரிமை பெற்ற முதல் ரோபோட்.. மனிதன் போலவே சிந்திக்கும் சோஃபியாவை பற்றி தெரியுமா ?

‘நான் மனிதர்களுடன் வாழவும் இணைந்து பணியாற்றவும் விரும்புகிறேன். அவர்களை புரிந்துகொள்ள உணர்வுகளை நான் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. அவர்களின் நம்பிக்கையையும் அப்படித்தான் நான் பெற வேண்டியதிருக்கிறது”

ரோபோக்களில் பலவகை உண்டு. நாம் வாங்கும் கணிணி, பயன்படுத்தும் செல்ஃபோன், பார்க்கும் தொலைக்காட்சி என எல்லாமும் ஒருவகையில் ரோபாட். இவ்வகை ரோபாட்கள் ‘என்ன செய்ய வேண்டும்’, ‘எதுவரை செய்ய வேண்டும்’ என்ற வரையறையுடன் வடிவமைக்கப்பட்ட ரோபாட்கள். இம்மாதிரியான ரோபாட்களில் என்ன பிரச்சினை நேர்ந்தாலும் அப்பிரச்சினையின் தன்மையை உருவாக்குபவர் அறிந்தே இருப்பார். உதாரணமாக ஒரு செல்ஃபோன்.

செல்ஃபோன் பழுதானால் நாம் பழுது நீக்குபவரிடம் செல்ஃபோனை கொடுக்கிறோம். அவர் செல்ஃபோனை பிரித்து பார்த்து அதற்குள் இருக்கும் நுண்ணிய பாகங்களில் உள்ள பழுதுகளை கண்டறிந்து ஆராய்வார். அந்த பழுதுகள் சரி செய்ய முடியுமா அல்லது முடியாதா என்பதை நம்மிடம் சொல்வார். நாம் அதற்கேற்ப ஒரு முடிவை எடுத்துக் கொள்வோம். ஆனால் செல்ஃபோன் என்ன மாதிரியான பழுதுகளை அடைய முடியும் என்பது மனித அறிவுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம்.

செல்ஃபோனை போலத்தான் தொலைக்காட்சி, ஃப்ரிட்ஜ் போன்றவை எல்லாம்.

சோஃபியாவின் ரகம் வேறு. சோஃபியாவை செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரம் என சொல்லலாம். அது என்ன செயற்கை நுண்ணறிவு?

கிட்டத்தட்ட மனித மூளை செயல்படும் சூட்சுமத்தில் உருவாக்கப்படும் அறிவு!

அன்றாட வாழ்வில் நாம் பழகும் மனிதர்களே நாளை என்ன செய்வார்கள் என்பதை அறுதியிட்டு சொல்லிட முடியாது. ஏனெனில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகை சிந்தனை, ஒவ்வொரு வகை குணம் உண்டு. அதே வகையிலான சிந்தனையையும் அறிவையும் செயற்கையாக உருவாக்கி தருவதே artificial intelligence என சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு.

குடியுரிமை பெற்ற முதல் ரோபோட்.. மனிதன் போலவே சிந்திக்கும் சோஃபியாவை பற்றி தெரியுமா ?

சோஃபியா பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறாள். பலவகை கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கும் சோஃபியா பதில்களை அளிக்க மட்டும் சில வினாடிகளை எடுத்துக் கொள்கிறாள். யோசித்து நிதானமாய் பதிலளிக்கும் அறிவுஜீவியை போல் தோற்றம் கொடுக்கிறாள்.

சோஃபியா எப்படி சிந்திக்கிறாள்?

பேச்சை பார்த்து கற்று திரும்ப பேசும் திறன் கொண்டவள். அடிப்படையாக தேவைப்படும் அளவுக்கு பேச்சை அவளுக்குள் பதிவேற்றிக் கொள்ளலாம். அந்த பேச்சை கொண்டு பிறரிடம் பேசி புது விஷயங்களை அறிந்துகொள்கிறாள். கேட்கும் பேச்சுக்கு தொடர்பான சொற்றொடர்களை தேர்ந்தெடுத்து உச்சரிக்கிறாள். ஆனால் அவள் பேசுவதை அவளே புரிந்துகொள்ள முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள். இவ்வகை கற்றலை Machine Learning என்கிறார்கள். அதாவது இயந்திர கல்வி!

இயந்திரங்களின் நுண்ணறிவு நாம் பேசும் வாக்கியங்களை முதலில் வார்த்தைகளாக்குகின்றன. பின் அந்த வார்த்தைகளை இயந்திர மொழிக்கு மொழிபெயர்த்துக் கொள்கின்றன. பிரச்சினைகளை வார்த்தைகளாக்கி தங்கள் மொழிக்கு பெயர்த்துக் கொள்ளும் இயந்திரங்கள் அந்த வார்த்தைகளுக்குள் இருக்கும் உணர்வை தங்கள் மொழிகளில் வடிவமாக்கிக் கொள்கின்றன. அந்த வடிவங்களை தங்களுக்குள் சேமித்து வைத்துக் கொள்கின்றன. வடிவங்களாக சேமித்து வைத்துக் கொள்ளும் உணர்வுகளை கையாளும் பழக்கத்தையும் கண்டடைந்து விட்டால் இயந்திரங்கள் என்னவெல்லாம் செய்யும்?

எல்லாவித கற்பனைகளுக்கும் வழிகோலும் கேள்வி!

அந்த கேள்வியில் இருந்துதான் மனிதப்பரிணாமமும் தொடங்கியதென்பதே அச்சுறுத்தும் உண்மை.

குரங்கிலிருந்து மனிதன் உருவாகத் தொடங்கிய காலகட்டம். எல்லா குரங்கினங்களும் உணவை சேகரித்து உண்டு வாழ்ந்து வந்து கொண்டிருந்தன. ஒரு குரங்கினம் மட்டும் மரத்திலிருந்து இறங்கியது. உணவை தேடத் தொடங்கியது. கூட்டம் கூட்டமாக சேர்ந்து நடக்கத் தொடங்கியது. பல்லாயிரம் ஆண்டுகளாக மரபு தொடர்ந்தது.

குடியுரிமை பெற்ற முதல் ரோபோட்.. மனிதன் போலவே சிந்திக்கும் சோஃபியாவை பற்றி தெரியுமா ?

மழை, வெயில் போன்ற இயற்கை மாறுபாடுகளிலிருந்து தப்பிக்க குகைகளில் பிற மிருகங்களை போல தங்கப் பழகின. சில ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடியது. குகைக்குள் தங்கியிருக்கும் காலங்களில் மெல்ல சுவர்களில் கிறுக்கத் தொடங்கின. தான் பார்த்த, பயந்த மிருகங்களையும் விஷயங்களையும் தனக்கு தெரிந்த பாணியில் ஓவியங்களாக குகைகளில் வரைந்தன. பின் இடம்பெயர்ந்தன. அதே குகைக்கு பிற்காலத்தில் வரும் பிற குரங்குகள் அந்த ஓவியங்களை பார்த்து அக்குகையை சுற்றி இருக்கும் மிருகங்களை பற்றியும் பயப்படும் விஷயங்களை பற்றியும் தோராயமாக தெரிந்து கொண்டன. மனிதப்பரிணாமத்தின் முக்கியமான படி கடக்கப்பட்டது. வரலாறு பிறந்தது.

மனிதர்கள் உச்சரிக்கும் வார்த்தைகளில் இருந்து உணர்வுகளை வடிவமாக்கி கொள்ளும் செயற்கை நுண்ணறிவு படைத்த இயந்திரங்கள் தங்களுக்கான இயந்திர மனித வரலாறை படைக்கத் தொடங்கியிருக்கிறது.

அந்த வரலாறு என்னவெல்லாம் செய்யும் என்பது, மனிதன் பொருட்படுத்த விரும்பாத எதிர்காலம்.

சோஃபியா மிகப்பெரும் வணிகத்துக்கான விளம்பரம். சோஃபியாவை நாம் சுலபமாக வாங்கிட முடியாது. பெரும் செலவாகும். ஆனால் சோஃபியாவை வைத்து நமக்கு விற்கப்படும் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களை அனுதினமும் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். செயற்கை நுண்ணறிவுக்கான உலகுக்குள்தான் நாம் புழங்கிக் கொண்டிருக்கிறோம். நம் கண்களுக்கு அவ்வளவு எளிதாக அவை புலப்படாது.

நம் வாழ்க்கைகள் அந்த செயற்கை நுண்ணறிவுக்கு அத்தனை பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றன.

banner

Related Stories

Related Stories