உலக வங்கி வெளியிட்டுள்ள பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. உக்ரைனில் நடந்து வரும் போர்,உணவு விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவை உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலகில் உணவிற்கான அதிகளவு பணவீக்கம் கொண்ட நாடாக லெபனான் பதிவாகியுள்ள நிலையில், ஜிம்பாப்வே, வெனிசூலா, துருக்கி ஆகிய நாடுகள் அடுத்த அடுத்த இடத்தில் உள்ளன. இலங்கைக்கு அடுத்தபடியாக ஈரான், அர்ஜென்டினா, சுரினாம், எத்தியோப்பியா மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகள் உள்ளன.
இதனிடையே, ஜூலை மாதம் பொருட்களின் விலை அதிகரிப்பு அல்லது பணவீக்கம் 66.7 வீதமாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றில் இது உச்சபட்சமாகும். மேலும் அங்கு அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது.
அதேபோன்று மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் எட்டு ஆண்டுகால ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பொருளாதார சரிவு என நாடே கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இதில் ஒன்றிய அரசு பெட்ரோல் -டீசல் விலையை உயர்த்தி மற்றொரு பக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் விலையை உயர்த்தாமல் ஒன்றிய அரசு அலட்சியம் செய்து வருகிறார். இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் வாங்கும் திறன் குறைந்து நாட்டின் மொத்த விலை பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
இதேபோன்று பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தால் இலங்கைக்கு ஏற்பட்ட நிலைதான் இந்தியாவுக்கு ஏற்படும் என பொருளாதார அறிஞர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இலங்கையில் பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டதால் அங்கு அத்தியாவசிய பொருள்களுக்கு கூட கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் பணவீக்கம் 8% எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.