பீகாரில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக ஆசிரியர்கள் அரசிடம் பலமுறை கோரிக்கை அளித்த நிலையிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று போராட்டம் நடத்தினர். ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தால் முக்கிய சாலைகள் அனைத்தும் முடங்கின. அதன்பின்னர் ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களிடம் போலிஸார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சு வார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. பணிநியமன ஆணை கிடைத்தால் மட்டுமே போராட்டம் வாபஸ் பெறப்படும் என உறுதியோடு இருந்ததால் போராட்டத்தை கலைக்க போலிஸார் களமிறக்கப்பட்டனர்.
அப்போது போலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் வன்முறை வெடித்தது. நூற்றுக்கணக்கான ஆயுதப்படையினர், அதிரடிப் படையினர் அங்கு வந்து போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை ஒடுக்கினர்.
இதில் 500க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனிடையே தேசியக் கொடியை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர் ஒருவரை பேச்சுவார்த்தை நடத்திவந்த கூடுதல் மாவட்ட ஆட்சியர் அடித்து கீழே தள்ளிய நிலையில், போலிஸ் கையில் இருந்த லத்தியை வாங்கி கூடுதல் மாவட்ட ஆட்சியர் அவரை கடுமையாக தாக்கினார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வர் மீது தாக்குதல் நடத்திய கூடுதல் ஆட்சியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இந்த போராட்டம் காரணமாக பீகாரில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.