உலக அளவில் ஊட்டசத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு கூறியிருந்தது. இது தவிர ஃபீடிங் அமெரிக்கா என்ற அமைப்பின் தரவின்படி, 2021 ஆம் ஆண்டில் 13 மில்லியன் குழந்தைகள் அதாவது, ஆறில் ஒரு குழந்தை உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
அதிலும் கொரோனாவுக்கு முன்னர் ஆப்பிரிக்கா, மற்றும் இதர முன்னேறும் நாடுகளில் மட்டுமே இந்த குறைபாடு இருந்தது. ஆனால், கொரோனா, உக்ரைன் போர் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளின் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேரடியாக குழந்தைகளை பாதித்துவருகிறது.
இந்த குறைபாடு அமெரிக்க குலந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. அங்குள்ள குழந்தைகள் ஊட்டசத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் அதை சரி செய்ய பல்வேறு மாகாண அரசுகளும் திட்டமிட்டுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாண அரசு, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. யுனிவர்சல் மீல்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திட்டம் இலவச காலை மற்றும் மதிய உணவுத் திட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.
இதன்மூலம் மாணவர்களுக்கு பள்ளியில் இலவச உணவை வழங்கும் முதல் அமெரிக்க மாநிலம் என்ற பெருமையை கலிபோர்னியா பெற்றுள்ளது. இந்த திட்டம் ஸ்பான்சர்களின் உதவியுடன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் திமுகவின் முன்னோடி அமைப்பான நீதி கட்சி 1925-களிலே சில பள்ளிகளில் நடைமுறைப்படுத்தியது. பின்னர் காமராசர், கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோரின் ஆட்சி காலத்தில் இது மேலும் விஸ்தரிக்கப்பட்டது. இந்த திட்டத்தை தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டமாகவும் விரிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.