அமெரிக்காவின் ஐயோவா பகுதியில் ஒருவருக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு சோதனை மேற்கொண்டபோது, அமீபாவால் ஏற்படும் மூளை அழிப்பு நோய்தொற்று அவருக்கு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.இதைத் தொடர்ந்து மருத்துவமனை சார்பில் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தொற்று ஏற்பட்டவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அங்குள்ள நீரில் குளித்ததாலே அவருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஏரி மற்றும் அதை ஒட்டிய பகுதி தற்காலிகமாக மூடப்படும் என்று மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் அந்த ஏரி நீரில் ஆபத்தான மூளையை பாதிக்கும் அமீபா இருக்கிறதா என சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் இந்த PAM அமீபா அபூர்வமாக ஏற்படும் நோய்தொற்றாகும். ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற சூடான நன்னீர் நீரில் வாழும் இந்த அமீபாக்கள் ஏரி, குளங்களில் குளிக்கும்போது இந்த அமீபா நம் மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும். பின் மூளையை அடைந்து அதன் செல்களை கொஞ்சம் கொஞ்சமாக உண்ணத் தொடங்கும் என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் 154 நோயாளிகள் மட்டுமே இந்த அமீபா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்றும், இது மனிதர்களிடமிருந்து பிறர்க்கு பரவாது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.