அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் கவனக்குறைவால் நோயாளிகள் பல பேர் தங்கள் வாழ்வை இழந்து தவித்து வருகின்றனர். உதாரணமாக கூறவேண்டுமென்றால், பல் வலி என்று போனவருக்கு கண்களில் ஆப்ரேஷன், காய்ச்சல் என்று வந்தவருக்கு, வயிற்றில் அறுவை சிகிச்சை என்று பல உண்டு. அண்மையில் கூட தமிழ்நாட்டில் வலது கால் வலி என்று மருத்துவமனைக்கு சென்ற பாட்டி ஒருவருக்கு, இடது காலில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் சர்ச்சையானது. இந்த சம்பவத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. இது போன்று தமிழ்நாடு, இந்தியா என இல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் நிகழ்ந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் ஸ்லோவாக்கியாவிலும் தற்போது அரங்கேறியுள்ளது.
ஸ்லோவாக்கியாவில் பிரபலமான கண் மருத்துவமனைகளில் ஒன்றில், நோயாளி ஒருவர் தனது பார்வையை பரிசோதனை செய்ய சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது ஒரு பார்வை குறைபாடு அதிகமாக இருப்பதாக கூறி, அதனை உடனடியாக அகற்றவில்லை என்றால், மற்றொரு கண்ணும் பாதிப்படையும் என்று எச்சரித்துள்ளார். இதனை கேட்ட நோயாளி கண்ணை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற சம்மதித்துள்ளார்.
இந்த நிலையில், அறுவை சிகிச்சை நடைபெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்த நிலையில் சிகிச்சை தொடங்க அனைவரும் ஆயத்தமானார்கள். அப்போது அறுவை சிகிச்சை செய்யப்போகும் மருத்துவர், நோயாளிக்கு பாதிப்படைந்துள்ள கண்ணை அகற்றாமல், ஆரோக்கியமாக இருந்த மற்றொரு கண்ணை நீக்கிவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு முற்றிலுமாக பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக சில வெளிநாடுகளில் அறுவை சிகிச்சை செய்யும் பொழுது, நோயாளிகள் மருத்துவர்கள் மேற்பார்வையில் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் இந்த சம்பவத்தில் நோயாளியை மருத்துவர் சரி வர பார்த்துக்கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக பிராட்டிஸ்லாவா பல்கலைக்கழக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியதாக ஸ்லோவாக்கியாவின் TASR செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நோயாளியும், அவரது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததால் அவர்களுக்கு கவுன்ஸிலிங் தேவைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டின் சுகாதார மேற்பார்வை ஆணையம் இது குறித்து தனது விசாரணையை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.