தனிமையைப் போக்குவதற்கெனவே ஜப்பானில் ஓர் அமைச்சகம் உண்டு, தெரியுமா?
முதுமையின் காரணமாகவும் சமூகத்தில் கலக்காத இளம் தலைமுறையினராலும் ஜப்பான் நாட்டில் தனிமை மரணங்கள் பல ஆண்டுகளாகவே வழக்கத்தில் இருக்கிறது. தனிமையில் நேர்ந்த மரணங்களை சுத்தப்படுத்தவே நிறுவனங்கள் இருக்கும் அளவுக்கு அங்கு தனிமை மரணங்கள் இயல்பு. கோவிட் கால ஊரடங்குகளின்போது தனிமை தற்கொலைகளின் எண்ணிக்கை உயர்ந்ததால், கடந்த வருடம் (2021) அங்கு தனிமை அமைச்சகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஜப்பானில் மட்டுமல்ல, பிரிட்டன் நாட்டிலும் தனிமை அமைச்சகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கோவிட் காலத்துக்கு பிறகல்ல, அதற்கு முன்பே, 2018-ல். அதற்கு முந்தைய ஆண்டில் நடந்த கணக்கெடுப்பு ஒன்றில் கிட்டத்தட்ட 2 லட்சம் முதியவர்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக எவரிடமும் பேசாத சூழல் பிரிட்டனில் நிலவுவதாகக் கண்டறியப்பட்டது. அதன் விளைவாக 2018ம் ஆண்டில் தனிமை அமைச்சகம் உருவாக்கப்பட்டது.
தனிமை அதனளவில் மட்டும் பிரச்சினையை உருவாக்காமல் பல நிலைகளில் அகப்பிரச்சினைகளை உருவாக்குகிறது. மனச்சோர்வு, பதட்டம், வெறுமை, மன அழுத்தம் போன்ற பல நிலைகளும் தனிமையுணர்ச்சியின் காரணமாகவும் விளைவாகவும் அமைகின்றன. தற்காலத்தில் அதிகமாகி இருக்கும் தனிமைத் துயருக்குக் காரணமாக நவீனத் தொழில்நுட்ப வாழ்க்கைப் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் இணைய உலகம் உள்ளும் புறமுமாக நம் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.
ஒருதலைப்பட்சமான புரிதல், 9 நொடிகளுக்கு மட்டுமே ஒரு விஷயத்தில் செலுத்தும் தொடர் கவனம், பைனரித்தனமான சிந்தனை, ஆழமற்ற வாசிப்பு, உறவுக்கு நேரம் கொடுக்காதது, மனிதர்களை cancel செய்ய பார்க்கும் சுபாவம், லைக்குகளைப் பொறுத்து வாழ்க்கையுடனும் மனிதர்களுடனும் உறவாடுவது, சகிப்பின்மை, துவேஷம், போலி பிம்பம் தரும் வெறுமை, புகைப்படமாகாத வாழ்க்கையின் மீதான வெறுப்பு, உடையுமளவுக்கான இலகுதன்மை, யதார்த்தம் மீறிய எதிர்பார்ப்புகள், உலகின் எதையும் தனக்குக் கிடைக்கும் லைக்குகளுக்கான content-ஆக மட்டுமே பார்ப்பது, வெற்றியோ தோல்வியோ அதீதமாக அணுகுவது, தன்முனைப்பால் மட்டுமே உருவாக்கப்படும் சிந்தனை போன்ற பல விஷயங்கள் கடந்த நமது வாழ்க்கை முறைகளாக மாறியிருக்கின்றன.
இத்தகைய மாற்றங்கள் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு வாழ்க்கையையும் உலகையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நவீன வாழ்க்கை எனத் தொழில்நுட்பத்தின் மீது மட்டும் பழிபோடாமல் யோசித்தால் இன்னும் பல விஷயங்களும் தனிமை விளைவிக்கும் பின்னணியை உருவாக்குவது புலனாகும்.
பணத்தை தேடி ஓடும் வாழ்க்கை, நிரந்தரமற்ற வருமானம், பணவீக்கம், விலைவாசி உயர்வு, தன்னை மட்டும் யோசிக்கச் சொல்லும் சித்தாந்தங்கள், குடும்பச் சிதைவுகள், தனிமனித வாழ்க்கை பாதுகாப்பிலிருந்து ஒதுங்கும் அரசுகள், நுகர்வுவெறி, பொதுத்துறை சிதைவு போன்ற பொருளாதார வாழ்க்கைகளும் தனிமை, வெறுமை ஆகிய துயரங்களுக்குக் காரணமாக இருக்கின்றன.
குறைந்தபட்சமாகவே சக மனிதனுக்கு நாம் கொடுக்க முடிவது புரிதலைத்தான். அதற்கு முதலில் நம்மை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை இயக்கும் சக்திகள் எவை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் சக மனிதர் யாவரும் எதிரியாகவே இருப்பார்.