பைரேட்ஸ் ஆஃப் தெ கரிபியன் போன்ற பல பிரபலமான ஆங்கிலத் திரைப்படங்களில் நடித்தவர் ஜானி டெப். அவரின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட். இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஒரே வருடத்தில் விவாகரத்தும் செய்தனர். அதன் பிறகு ஆம்பர் ஹெர்ட் ஒரு பத்திரிகையில் ‘தனக்கு பல வன்கொடுமைகள் நேர்ந்ததாக’ சொல்லி கட்டுரை எழுதியிருந்தார். அதன் விளைவாக ஜானி டெப்புக்குக் கிடைக்க வேண்டிய பைரேட்ஸ் ஆஃப் தெ கரீபியன் படத்தின் அடுத்த வாய்ப்பு பறிபோனது. எனவே ஆம்பர் ஹெர்டின் மீது மான நஷ்ட வழக்கு தொடுத்தார் ஜானி டெப்.
கடந்த சில வாரங்களாக நடந்த வழக்கு விசாரணை சமூக தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. காரணம், மொத்த விசாரணையும் தொலைக்காட்சியாக பதிவாக்கப்பட்டு நேரலை செய்யப்பட்டிருக்கிறது. விளைவாக, பல விஷயங்கள் நேர்ந்தன.
ஜானி டெப் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ஹேஷ்டேக் உருவாக்கினர். விசாரணையின் தொடக்கக் கட்டத்தில் ஆம்பெர் ஹெர்ட் விசாரிக்கப்பட்டார். பல முறை அழுதார். சமூக தளங்களில் அவரின் நடத்தை கடுமையாக விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. அவர் எந்தக் கேள்விக்கும் நேரடி பதில் கூறவில்லை. அழுவதாக பாவனைதான் செய்தார். ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தவில்லை என விமர்சனத்துக்கு உள்ளானார். அதற்கு அடுத்த விசாரணைகளின் போது அவர் அழவில்லை. எல்லாவற்றுக்கும் புருவம் உயர்த்தி பதில் கூறினார்.
மறுபக்கத்தில் ஜானி டெப், பைரேட்ஸ் ஆஃப் தெ கரிபியன் பட ஜேக் ஸ்பாரோ பாத்திரம் போல விசாரணைகளை நகைச்சுவையாக எதிர்கொண்டார். சிரித்தார். புன்னகைத்தார். வழக்கறிஞர்களைக் கிண்டல் செய்தார். எல்லாரிடமும் நாகரிகமாக நடந்து கொண்டார். இயல்பாகவே சமூகதளங்களில் அவருக்கு வரவேற்பு அதிகமானது.
சர்ச்சைக்குரியக் கட்டுரையில் ஜானி டெப்பை குறிப்பிடவில்லை என ஆம்பர் ஹெர்டின் தரப்பு வாதிட்டது. ஜானி டெப்பின் புகழ் களங்கப்பட வேண்டும் என்பதற்குதான் அக்கட்டுரை எழுதப்பட்டதாக வாதிட்டது ஜானி டெப்பின் தரப்பு. இன்று இறுதி தீர்ப்பு வெளிவந்து, ஜானி டெப்பைக் குறித்தே ஆம்பர் ஹெர்ட் அக்கட்டுரையை எழுதினார் எனச் சொல்லி அபராதம் விதித்திருக்கிறது.
இரு பணக்காரர்களுக்கு இடையிலான விவகாரம். அதில் நமக்கென்ன இருக்கிறது எனக் கேட்கலாம். இருக்கிறது. இன்றைய லிபரல் உலக இளைஞர்களின் எல்லாமும் இருக்கிறது.
ஆம்பர் ஹெர்ட் கட்டுரையிலேயே ‘உலகில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்களின் வரிசையில் தானும் ஒருத்தி’ என்கிற தொனியிலேயே எழுதியிருந்தார். குறிப்பாக ஆண்களின் அதிகாரத்தால் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் இணைந்த ‘Me Too' பிரசாரத்தில் தன்னையும் சேர்த்துக் கொண்டார். ஆனால் விசாரணையில் வெளிப்பட்டதோ வேறு.
விசாரணையில் ஜானி டெப்பும் ஆம்பர் ஹெர்டும் பேசிய பல ஒலிப்பதிவுகள் ஒலிபரப்பப்பட்டன. அதில் இருவருமே மோதலில் பங்கெடுத்தது தெளிவானது. பல தருணங்களில் ஜானி டெப்பை வேண்டுமென்றே வம்பிழுத்திருக்கிறார் ஆம்பர் ஹெர்ட். அவரைத் தொடர்ந்து அவமானப்படுத்தி வந்திருக்கிறார். அவர் கோபமடைந்து விலகிச் சென்றபோதும் அவர் முன்னே சென்று கோபத்தைத் தூண்டும் விதத்தில் செயல்பட்டிருக்கிறார். ஒரு மது பாட்டிலால் அவரது விரலை சிதைத்திருக்கிறார். ஜானி டெப்பும் ஆம்பர் ஹெர்டை திட்டியிருக்கிறார். அடித்திருக்கிறார். கோபப்பட்டிருக்கிறார். இரு தரப்பும் மோதலில் பரஸ்பரம் பங்கெடுத்திருக்கின்றன. ஒரே ஒரு வித்தியாசம்!
ஆணினத்துக்கு நேர்ந்த கொடுமைகளின் வரிசையில் தனக்கும் கொடுமை நேர்ந்திருப்பதாக ஜானி டெப் கட்டுரை எழுதவில்லை. எல்லாப் பெண்களையும் போலவே தானும் ஒடுக்கப்பட்டதாக ஆம்பெர் ஹெர்ட் கட்டுரை எழுதினார். அவரும் பரஸ்பரம் ஒடுக்கினார் என்பதை மட்டும் எழுத தவிர்த்துவிட்டார்.
ஆம்பர் ஹெர்ட் சொன்னவற்றில் பலவை பொய்கள், திரிபுகள் என விசாரணைகளில் அம்பலமானது. அவை அனைத்தையும் பெண் விடுதலை, பெண்களுக்கான உரிமை, ஆண் ஒடுக்குமுறை ஆகிய விஷயங்களாக முன் வைத்து தன்னுடையக் குற்றங்களை மறைத்துக் கொண்ட விஷயம் தெளிவாக வெளியானது.
அப்படியென்றால் ஜானி டெப் செய்தது சரியா?
நிச்சயமாக இல்லை. மேலும் அவர் செய்த எவற்றையும் அவர் மறுக்கவுமில்லை. குறிப்பாக இந்த வழக்கு விசாரணை ஜானி டெப்பை ஆம்பர் ஹெர்ட் தன் கட்டுரை வழியாக அவமானப்படுத்த முயன்றார் என்பதை எதிர்த்தே. இருவரின் உறவு ரீதியான சிக்கல்கள் முற்றி, அதற்கென தனியாக வழக்கு நடந்து இருவரும் விவாகரத்தும் பெற்று விட்டனர். சொல்லப்போனால், அதற்குப் பிறகு இருவரும் சுமூகமாக பிரிந்துவிட்டோம் என இருவரும் இணைந்து பேட்டி கூட கொடுத்தனர். அவை எல்லாம் நடந்த பிறகு ஆம்பர் ஹெர்ட் எழுதியக் கட்டுரைதான் இந்த வழக்கு.
ஆம்பர் ஹெர்ட் ஒரு டாக்சிக் ஃபெமினிஸ்டாக விமர்சிக்கப்படுகிறார். டாக்சிக் என்றால் என்ன? நச்சுத்தன்மை எனக் கூறலாம்.
அதாவது தன்னுடைய இயல்பினால் ஏற்பட்ட ஒரு சிக்கலிலிருந்து தப்பிக்க, பொதுவாக இருக்கக் கூடிய ஒரு பிரச்சினையைத் துணைக்கு அழைத்து ஒரு பெரும் பிரச்சினையாக அதை மாற்ற முயலுவதைதான் டாக்சிக் எனக் கூறுகிறோம்.
ஜானி டெப் மீதான ஈகோ மோதல் மற்றும் பழியுணர்ச்சி ஆகியவற்றால் உருவாக்கிக் கொண்ட மோதலை, Me Too என உண்மையாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கான போராடும் இயக்கத்தோடு இணைப்பதுதான் toxic.
இது போல் பல பெண்களும் ஆண்களும் காதல், காமம், பதவி, வளர்ச்சி, புகழ் முதலிய தனிப்பட்டக் காரணங்களுக்காக லிபரல் உலகில் எடுக்கும் தவறான முடிவுகளால் ஏற்படும் சிக்கல்களை ஒரு பெரும் சமூக ஒடுக்குமுறையுடன் இணைத்து பேசி தனது தவறுகளை மறைக்க முயலுவதே toxicity.
Toxicity எச்சரிக்கை!