இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.
மே மாதம், 25, 2020
ஜார்ஜ் ஃப்ளாய்ட்!
காலமும் உலகமும் வேகத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் மாற்றம்?
ஜார்ஜ் ஃப்ளாய்டு அருகே இருக்கும் ஒரு கடைக்கு சென்றிருக்கிறார். அங்கு ஒரு சிகரெட் பாக்கெட் வாங்கியிருக்கிறார். அதற்கான பணமாக 20 டாலர் நோட்டை கொடுத்திருக்கிறார். கடையின் உரிமையாளர் அந்த பணம் கள்ளப்பணமாக இருக்கலாம் என சந்தேகித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கிறார்.
சற்று நேரத்தில் இரண்டு போலீஸ் கார்கள் அப்பகுதிக்கு வருகின்றன. ஜார்ஜ் ஃப்ளாய்டு நண்பர்களுடன் காரருகே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அவரருகே செல்லும்போதே தாமஸ் லேன் என்னும் காவலர் துப்பாக்கியை எடுத்து ஜார்ஜ் ஃப்ளாய்டு நோக்கி நீட்டியபடி வருகிறார். கைது செய்யப்படுபவரிடம் செல்லும்போதே துப்பாக்கியை எடுக்க வேண்டிய அவசியம் அமெரிக்காவில் இல்லை. ஆனாலும் காவலர் எடுத்தார்.
வெளியே அழைத்ததும் ஜார்ஜ் ஃப்ளாய்டு காருக்கு வெளியே வருகிறார். அவரின் கைகளில் விலங்கு பூட்ட முயலுகையில், ‘ஏன் கைது செய்கிறீர்கள்’ என கேட்டு தடுக்கிறார். வலுக்கட்டாயமாக அவரைப் பிடித்து கைவிலங்கு பூட்டுகின்றனர் காவலர்கள். ‘கள்ளநோட்டு பயன்படுத்தியதற்காக கைது’ என சொல்லி ஜார்ஜ் ஃப்ளாய்டை காவலர்களின் காரில் ஏற்ற முயன்றிருக்கின்றனர். ‘கள்ளப்பணம் பயன்படுத்தவில்லை’ என சொல்லி காரில் ஏற மறுத்திருக்கிறார் ஜார்ஜ் ஃப்ளாய்ட்.
அப்போதுதான் டெரிக் சாவின் என்கிற காவலதிகாரி வருகிறார். காரருகே நின்று நுழைய மறுத்துக் கொண்டிருந்த ஜார்ஜ் ஃப்ளாய்டை இழுத்து கீழே தள்ளிவிடுகிறார். ஜார்ஜ் ஃப்ளாய்டு கீழே விழுந்ததும் அவர் முகத்தை தரையோடு அழுத்தி, அவர் கழுத்தின் மீது முழங்காலை வைக்கிறார். பிறகுதான் நாம் பார்த்த சம்பவம் நடந்தது.
‘அம்மா, அம்மா’ என்று அழுதும் காவலர்களை கெஞ்சிக் கதறியும் ஜார்ஜ் ஃப்ளாய்ட் பொருட்படுத்தப்படவில்லை. அவர் விட்டுச் சென்ற, ‘என்னால் மூச்சுவிட முடியவில்லை’ என்கிற கடைசி வாக்கியம் காற்றிலேறி பரவத் தொடங்கியது.
மே 26. மிநியோப்பாலிஸ் நகரம்.
அடக்கி வைக்கப்பட்ட மக்களின் கோபம் பற்றி எறிந்தது.
ஜார்ஜ் ஃப்ளாய்டு இறப்பதற்கு முன்னால் உச்சரித்த ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என்பது முக்கியமான கோஷமானது. மக்கள் பதாகைகளை தூக்கி ‘எங்களால் மூச்சு விட முடியவில்லை’ என்றார்கள். மினியோப்பாலிஸ் நகர காவல் நிலையத்தை நோக்கி கூட்டம் சென்றது. கறுப்பினத்தவரின் வாழ்க்கை முக்கியம் என்ற அர்த்தம் தொனிக்கும் Black Lives Matter என்ற கோஷத்தையும் முன் வைத்தனர். காவல் நிலையம் அடித்து நொறுக்கப்பட்டது. காவலர் வாகனங்கள் கொளுத்தப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன.
அடுத்தடுத்த நாட்களும் போராட்டம் தொடர்ந்தது. கூட்டம் பல ஆயிரங்களை தொட்டது.
ஃப்ளாய்டின் மரணத்துக்குக் காரணமான காவலன் டெரிக், மே மாதம் 29ம் தேதி கைது செய்யப்பட்டார். 22 வருடங்கள் விதிக்கப்பட்டிருக்கிறது.
ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்துக்கு பின் போராடியவர்கள் முக்கியமான ஒரு விஷயத்தை முன் வைத்தனர்.
‘ஜார்ஜ் ஃப்ளாய்டு போன்றவொரு கறுப்பினத்தவராக இல்லாமல், ஏதேனும் ஒரு வெள்ளை இனத்தவர் இதே குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தால் அமெரிக்கக் காவல்துறை இதே போல்தான் நடந்திருக்குமா?’ என்பதே அவர்கள் முன் வைத்தக் கேள்வி.
அமெரிக்கரோ அல்லது வெள்ளை இனத்தவரோ ஜார்ஜ் ஃப்ளாய்டை போலவே கள்ளப்பண குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தால் என்ன நடந்திருக்கும்?
காவல்துறை இதே போல் அவரை கீழே தள்ளியிருக்குமா? கழுத்தின் மீது ஏறி நின்று சுவாச மூச்சை தடுத்திருக்குமா? கீழே இருந்தவர் உயிர் போகிறது என கதறும்போதும் காலை எடுக்காமல் தொடர்ந்து உயிர் போகும் வரை நெறித்திருக்குமா?
எல்லாமுமே நியாயமான கேள்விகள். ஏனெனில் அமெரிக்காவில் பெரும்பான்மையான மக்களுக்கு நிறவெறி தொடர்ந்து ஊட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கறுப்பினத்தவர் மீதும் அமெரிக்கரல்லாத மக்கள் மீதும் காட்டப்படும் வெறுப்புணர்வுக்கு அமெரிக்கா பெயர் பெற்றது.
காவல்துறையை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் அரசிலும் நிறவெறி இருக்கிறது என்பதையே மக்களின் கேள்விகள் உணர்த்துகின்றன. அமெரிக்க மக்களுக்கு திட்டமிட்டு நிறவெறியை அவர்களின் அரசே தொடர்ந்து ஊட்டி விட்டுக் கொண்டிருக்கிறது.
ஜார்ஜ் ஃப்ளாய்டு நம் கண்களுக்கு நேரடியாக தெரிந்து ஒரு பலி மட்டும்தான். நிறவெறி, மதவெறி, சாதிவெறி என எல்லா வெறிகளும் அரசுகளின் துணை கொண்டு அன்றாடம் பலரின் உயிர்களை குடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.