உக்ரைன் மீது ரஷ்யா இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்ச்சியாகப் போர் தொடுத்து வருவதற்கு உலக நாடுகள் முழுவதும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இருப்பினும் போரைக் கைவிடாமல் ரஷ்யா இருந்து வருகிறது.
இந்நிலையில்,அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், உக்ரைன் மீதான ரஷ்யாவின் மிருகத்தனமான படையெடுப்பு என கூறுவதற்குப் பதிலாக ஈராக் மீது ராஷ்யாவின் படையெடுப்பு என தவறுதலாக பேசியுள்ளார்.
இந்த தவறை உணர்ந்த உடனே அவர், ஈராக் அல்ல உக்ரைன் என திருத்தி கூறியுள்ளார். மேலும் தனக்கு 75 வயதாகிவிட்டதால் இந்த தவறு நடந்துவிட்டது எனவும் கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சை அடுத்து நெட்டிசன்கள் பலரும் ஜார்ஜ் புஷ்ஷை கிண்டலடித்து வருகின்றனர்.
குறிப்பாக, இப்போதாவது ஈரோக் மீது அமெரிக்கா நடத்திய மிருகத்தனமான படையெடுப்பு என ஒத்துக் கொண்டீர்களே என ஜார்ஜ் புஷ்ஷை கலாய்த்து சமூகவலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர். போர் கொடூரமானது என புஷ் மனம் திறந்து பேசியுள்ளார் எனவும் கூறியுள்ளனர். ஜார்ஜ் புஷ் பேசும் இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் 2003ம் ஆண்டு ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்த காலத்தில் அமெரிக்கப் படைகள் ஈராக் மீது போர் தொடுத்தன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.