1) சக்கர நாற்காலியில் வந்த போப் பிரான்சிஸ்!
ரோம் நகரில் ஒரு கூட்டத்தில் பங்கேற்க உலகமெங்கும் இருந்து வந்துள்ள கன்னியாஸ்திரிகள், சகோதரிகளை வாடிகனில் நேற்று போப் பிரான்சிஸ் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்து, ஒரு உதவியாளர் துணையுடன் வந்தார். பொதுவெளியில் போப் பிரான்சிஸ் சக்கர நாற்காலியை பயன்படுத்தியது இதுவே முதல்முறை . 85 வயதான போப் பிரான்சிஸ் கடந்த சில காலமாகவே வலது முழங்கால் தசைநார் அழுத்தத்தால் தொடர்ந்து நடப்பதற்கு போராடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2) சுதந்திர தினவிழாவில் கத்திக்குத்து!
இஸ்ரேலின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது.இந்நிலையில், டெல் அவிவ் நகரில் பெரும் திரளாக கூடியிருந்த கூட்டத்தில் மர்ம நபர்கள் 2 பேர் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் கூறுகையில், பயங்கரவாதிகள் மீதும், அவர்களுக்கு ஆதரவான சூழலிலும் கை வைப்போம். அதற்கான விலையை அவர்கள் கொடுப்பார்கள் என தெரிவித்தார்.
3) உகாண்டாவில் சோகம் - பஸ் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் பலி!
உகாண்டாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள போர்ட் போர்டல் நகரில் இருந்து தலைநகர் கம்பாலாவுக்கு பயணிகள் பஸ் ஒன்று போர்ட் போர்டல் நகருக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. நெடுஞ்சாலையோரம் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்த பஸ் பல முறை உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 7 சிறுவர்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
4) பன்றியின் இதயம் பொருத்தப்பட்டவருக்கு புதிய வைரஸ்!
அமெரிக்காவின் டேவிட் பென்னட்-க்கு பொருத்தப்பட்ட பன்றியின் இதயத்திற்குள் டிஎன்ஏ போர்சின் சைட்டோமெகலோ வைரஸ் என்று அழைக்கப்படும் வைரஸ் தொற்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு உறுப்புகளை பொருத்துவதால் புதிய தொற்றுகள் உருவாகும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் பன்றியின் இதயத்தை அவருக்கு மருத்துவர்கள் பொருத்தினர். பின்னர் இரண்டு மாதங்களில் டேவிட் பென்னட் காலமானார் என்பது நினைவு கூறத்தக்கது.
5) வெள்ளை மாளிகையின் முதல் கறுப்பின செய்தி செயலாளர்!
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் புதிய செய்திச் செயலாளராக கரீன் ஜீன்-பியர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் செய்தி செயலாளர் உயர் பதவியை வகிக்கும் முதல் கறுப்பின நபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இந்த பதவியை பெரும் முதல் எல்ஜிபிடிகியூ(LGPDQ) நபராகவும் கரீன் ஜீன்-பியர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பணியில் இருந்த ஜென் சாகிக்கு பதிலாக மே 13 ஆம் தேதி முதல் கரீன் ஜீன்-பியர் பொறுப்பேற்று கொள்ளவுள்ளார்.