1) முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது வழக்கு பதிவு!
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அண்மையில் சவுதி அரேபியா சென்றிருந்தபோது, அங்கு இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஷபாஸ் ஷெரீப்பை ‘திருடர்’, ‘துரோகி’ என கூறி கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண போலீசார் இம்ரான்கான் மற்றும் முன்னாள் மந்திரிகள் பலர் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் இம்ரான்கானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் அவர் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தானின் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.
2) அமெரிக்க மாகாணத்தை புரட்டிப்போட்ட சூறாவளி!
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தை பயங்கர சூறாவளி தாக்கியது. அங்கு மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இந்த சுழல் காற்றில் சிக்கி வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் மரங்கள், மின் கம்பங்கள் என அனைத்தும் துவம்சம் செய்யப்பட்டன. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களின் மேற்கூறைகள் பல மைல் தொலைவுக்கு தூக்கி எறியப்பட்டன. குறிப்பாக இந்த சூறாவளி கன்சாஸ் மாகாணத்தின் அண்டோவர் நகரை முற்றிலுமாக புரட்டிப்போட்டு விட்டது. அங்கு 100-க்கும் அதிகமான கட்டிடங்கள் முற்றிலுமாக இடிந்து தரை மட்டமாகின. மேலும் சூறாவளி காற்றில் சிக்கி மின் கம்பங்கள் சாய்ந்ததால் அந்த நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.
3) இலங்கையில் மீண்டும் தேர்தலை நடத்த வலியுறுத்தல்!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என பொதுமக்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்டோர் போராட்டத்தின் மூலம் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என அந்நாட்டு முன்னாள் அதிபரான மைத்ரிபால சிறிசேனா வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் பொலனருவா பகுதியில் நடைபெற்ற மே தின விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி சிக்கலில் இருந்து மீள்வதற்கு மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
4) மலைப்பாம்புகளுடன் நடனமாடி வாலிபர்!
இந்தோனேசியாவில் வாலிபர் ஒருவர் 2 மிகப்பெரிய மலைப் பாம்புகளை தனது தோளில் போட்டுக்கொண்டு நடனமாடியுள்ளார். மலைப்பாம்புகள் ஆட்களையே விழுங்கி விடும் அபாயம் நிறைந்தவை. ஆனால் அந்த பயம் இல்லாமல் இந்தோனேசியாவில் வாலிபர் ஒருவர் 2 மிகப்பெரிய மலைப் பாம்புகளை தனது தோளில் போட்டுக்கொண்டு நடனமாடியுள்ளார். அவரது இந்த நடனக்காட்சி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 20 அடி நீளம் உள்ள அந்த மலைப்பாம்புகளுடன் அவர் நடனமாடியதால் அதை பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர் பாம்பு அருகில் சென்றபோது ஒருதடவை அந்த பாம்பு அவரை விழுங்க முயன்றதும் பதிவாகியுள்ளது.
5) பெகாசஸ் மென்பொருள் தாக்குதலுக்கு உள்ளான பிரதமர்!
ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் மற்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி ஃபெலிக்ஸ் பொலானோஸ் ஆகியோரின் செல்போன்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இருவரின் செல்போன்கள் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பெகாசஸ் மென்பொருள் அரசாங்க நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் அரசு அதற்கு அனுமதி வழங்காத நிலையில் யாரோ மூன்றாம் நபர் அந்த மென்பொருள் மூலம் பிரதமர் மற்றும் மந்திரியின் செல்போன்களை உளவு பார்க்க முயற்சித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கும் ஸ்பெயின் நாட்டின் தேசிய கோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது.