உலகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என சாமானிய மக்கள் வரை பலரும் ட்விட்டர் சமூகவலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
கொரோனா காலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கு ட்விட்டரை ஒரு பிரச்சார கருவியாகப் பலரும் பயன்படுத்தினர். இருப்பினும் ட்விட்டர் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளையும் சந்தித்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
இந்நிலையில், சில நாட்களாக உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறிவந்தார். இதை உறுதி செய்யும் விதமாக அண்மையில் ட்விட்ரில் 9.1 சதவீத பங்குகளை வாங்கினார்.
இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ரூ.3.30 லட்சம் கோடிக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவது உறுதியாகியுள்ளது.
மேலும், "நான் பணம் சம்பாதிப்பதற்காக ட்விட்டரை வாங்கவில்லை. சுதந்திரமாக பயனர்கள் கருத்துத் தெரிவிக்க ஒரு வலைதளத்தை கட்டமைக்கும் நோக்கில் ட்விட்டரை வாங்க விரும்புகிறேன்" என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி, ட்விட்டர் நிறுவனத்தை விற்பது குறித்து மனம் திறந்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், "எலான் மஸ்க்கை நான் நம்புகிறேன். யோசனையும் சேவையும் தான் எனக்கு முக்கியம். இரண்டையும் பாதுகாக்க நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.
யாரும் ட்விட்டரை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் அல்லது இயக்கவேண்டும் என்று நான் விரும்பவில்லை. இது பொது நன்மையாக இருக்கவே விரும்புகிறேன். இருப்பினும் நிர்வாக சிக்கலைத் தீர்க்க எலன் மஸ்க்கால் முடியும் என நான் நம்புகிறேன்.
பரந்த ஒரு தளத்தை உருவாக்கும் எலனின் குறிக்கோள் சரியானது. நிறுவனத்தை அசாத்தியமான சூழ்நிலையிலிருந்து மீட்க அவரால் முடியும் என்பதை முழு மனதுடன் நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.