1) சிங்கப்பூரை அதிர வைத்த சம்பவம்!
சிங்கப்பூரில் உயர் பதவி வகிக்கும் மருத்துவர் ஒருவர், நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக உப்பு கரைசல் திரவத்தை ஊசி வழியாக செலுத்திய புகாரில் கைது செய்யப்பட்டார். 33 வயதான டாக்டர் குவா என்பவர், போலியாக நோயாளிகள் பெயரில் கணக்கை தொடங்கி, அந்த நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக முடிவுகளை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
போலியான உப்பு கரைசலை தடுப்பூசி என கூறி, நோயாளிகளுக்கு செலுத்திய பின், நோயாளிகளிடமிருந்து அதிக கட்டணத்தையும் வசூலித்துள்ளார் இந்த வசூல்ராஜா MBBS. சாதாரண உப்பு கரைசலை வைத்துக்கொண்டு மொத்த சிங்கப்பூரையும் ஒரு கலக்கு கலக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
2) தாடி இருந்தால் மட்டுமே அரசு அலுவலங்களுக்குள் அனுமதி
ஆப்கானிஸ்தானில் தாடி இல்லாத அரசு ஊழியர்கள், அலுவலகங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தலீபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்தே தலிபான்கள் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
தற்போது அரசு ஊழியர்களுக்கு ஒரு புதிய கட்டுப்பாட்டை தலிபான்கள் விதித்துள்ளனர். அதில், அரசு ஊழியர்கள் தாடி வைத்திருந்தால் மட்டுமே அலுவலங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இந்த உத்தரவுக்கு தலிபான் ஆதரவாளர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
3) சூப்பர் மார்கெட் மீது விழுந்து நொறுங்கிய விமானம்!
மெக்சிகோவின் அகாபுல்கோ நகரில் இருந்து விமானி உட்பட 4 பேருடன் புறப்பட்ட சிறிய ரக விமானம், பியூப்லா நகரை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது மத்திய மெக்சிகோவின் டெமிக்ஸ்கோ பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். விமானத்தில் இருந்த 4 பேரில் 3 பேர் பலியான நிலையில், படுகாயம் அடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
4) உலகின் இளம் ஓபரா பாடகர்!
உலகின் இளம் ஓபரா பாடகராக விக்டரி பிரின்கரை அறிவித்துள்ளது கின்னஸ் உலக சாதனை அமைப்பு.. அவருக்கு வயது 7. ஏழு வயதில் நிபுணத்துவம் பெற்ற இளம் இசைக்கலைஞர் என்கிற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரியாக ஆகியுள்ளார் விக்டரி.
5) அமெரிக்காவில் திடீர் பனிப்புயல்!
அமெரிக்காவில் ஏற்பட்ட பனி புயலால் 60 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பனி புயல் ஏற்பட்டு உள்ளது. இதனால், சாலையில் கார்கள், லாரிகள் மற்றும் டிராக்டர்கள் உள்ளிட்ட 50 முதல் 60 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. கடந்த ஒரு மாதத்தில், ஷுயில்கில் கவுன்டி பகுதியில் நடைபெறும் இரண்டாவது மிகப்பெரிய வாகன மோதல் இதுவாகும்.