தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய அரசாங்க நிர்வாகிகளையும், தொழிலதிபர்களையும் சந்தித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் (Dubai International Financial Centre) ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி அவர்களையும், (H.E. Abdulla Bin Touq Al Marri) ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி அவர்களையும் (H.E. Dr. Thani Bin ahmed Al Zeyoudi) சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஐக்கிய அமீரக அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார். ஐக்கிய அரபு நாடுகளின் அமைச்சர்களுக்கு 'Karunanidhi A Life', 'Journey of a Civilization Indus to Vaigai' ஆகிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.
மேலும், லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனர் யூசுப் அலியைச் சந்தித்தார். கேரளாவைச் சேர்ந்த யூசுப் அலி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற லூலூ சூப்பர் மார்க்கெட் குழுமத்தின் தலைவர் ஆவார்.
2018-ல் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட பட்டியலின்படி அரபு நாடுகளில் தொழில் செய்யும் 100 இந்திய தொழிலதிபர்களில் முதல் இடத்தில் யூசுப் அலி இருந்தார். அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்துள்ளார்.
தொடர்ந்து, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய (MEASA) பிராந்தியத்தில் நடைபெற்று வரும் உலக வர்த்தக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதைத்தொடர்ந்து உலக வர்த்தக கண்காட்சியைப் பார்வையிட்டார்.