1) வங்க தேசத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
வங்கதேசத்தில் பயணிகள் படகு ஒன்றை சரக்கு கப்பல் இடித்து மூழ்கடித்ததில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். தலைநகர் டாக்கா அருகே உள்ள சித்தாளட்சியா ஆற்றில் உள்நாட்டு சரக்கு மற்றும் பயணிகள் படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
வேகமாக வந்த ஒரு சரக்கு கப்பல் கட்டுப்பாட்டை இழந்து 60 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த படகின் மீது மோதியதில் சரக்கு கப்பல் பயணிகள் படகினை சிறிது தூரம் இழுத்துச் சென்று மூழ்கடித்துவிட்டது. ஆற்றில் தத்தளித்த பயணிகளில் பெரும்பாலானோர் நீந்தி கரை சேர்ந்தனர். இருப்பினும் 2 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாக வங்கதேச அதிகாரிகள் கூறியுள்ளனர்.
2) அமெரிக்காவை எச்சரிக்கும் சீன துணை அமைச்சர்
‘இந்தோ - பசிபிக் பகுதியில் நேட்டோ அமைப்பை விரிவுப்படுத்த அமெரிக்கா முயற்சி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று சீனா எச்சரித்துள்ளது.
அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் லீ யு செங் கூறுகையில், “சோவியத் யூனியன் சிதைந்த பிறகு, வார்சா உடன்படிக்கையுடன் சேர்த்து நேட்டோ அமைப்பும் கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நேட்டோ வலுவடைந்து விரிந்து கொண்டே செல்கிறது. இதனால்தான் உக்ரைனில் இப்போது போர் ஏற்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை அடக்க அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் உத்தியின் அடிப்படையில் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்த குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவில் நேட்டோவை உருவாக்கும் அமெரிக்காவின் முயற்சி. இது அபாயகரமானது. இது தடுக்கப்படாவிட்டால் ஆசிய-பசிபிக் பகுதியை படுகுழியில் தள்ளிவிடும்” என்றார்.
3) பிரான்சில் குப்பைக்கூளமாக கிடப்பதாக வீட்டை விற்ற நபர்
பிரான்சில் குப்பைக்கூளமாக கிடப்பதாகக் கூறி தனது பாரம்பரிய வீட்டை விற்றுள்ளார் ஒருவர். அதில் புதையல் இருப்பதாக நம்பி பிறகு அது காணாமல் போய்விட்டதாக எண்ணி அந்த இடத்தை 130,000 யூரோக்களுக்கு மோரேஸ் நகராட்சிக்கு விற்றுள்ளார். புதுப்பிப்பதற்காக அந்த வீட்டை இடிக்கும்போது அங்கு 5 தங்கக்கட்டிகளை கண்டெடுத்துள்ளனர்.
சிறிது கால இடைவெளிக்குப் பிறகு, பூட்டப்பட்ட பெட்டி ஒன்றினுள் பல தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. மேலும் பல புராதான கலைப் பொருள்களும் அந்த வீட்டிலிருந்து கிடைத்துள்ளன. ஆக, அந்த வீட்டில் கிடைத்த புதையலின் மொத்த மதிப்பு 650,000 யூரோக்கள், அவை ஏலம் போயுள்ளதோ 772,955 யூரோக்களுக்கு!
4) அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் முதன்முறையாக நீதிபதியாக ஒரு கறுப்பின பெண்!
அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் முதன்முறையாக கறுப்பின பெண் ஒருவர் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். முன்னதாக கறுப்பின பெண்ணான கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் என்பவரை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் அளித்தார். அவருடைய இந்த ஒப்புதலுக்கு பின்னர் அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தி அதன்பின் தான் அவர் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
தற்போது 51 வயதாகும் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன், ஓய்வு பெறப்போகும் 83 வயது நீதிபதி ஸ்டீபன் பிரேயர் என்பவருக்கு பதிலாக களமிறக்கப்பட்டுள்ளார். ஜாக்சன் சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றும் மூன்றாவது ஆப்பிரிக்க - அமெரிக்கர் ஆவார். ஆனால் முதல் கறுப்பினப் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
5) தென்கொரியாவில் 3¼ லட்சம் பேருக்கு கொரோனா
ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிரித்து வருகிறது. அந்த வகையில், கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 748 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சத்து 41 ஆயிரத்து 151 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
இதன் மூலம் வியட்நாமில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 79 லட்சத்து 58 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் சீனா, மலேசியா ஆகிய ஆசிய நாடுகளிலும் கொரோனா வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. ஆசியா, ஐரோப்பாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு கூறும்போது, ‘கொரோனா தொற்று நோயின் முடிவு வெகுதொலைவில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.