1) 400 பேர் தங்கியிருந்த பள்ளி மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல்!
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்துள்ளது. மூன்று வாரங்களுக்கு மேலாக நடந்துவரும் இந்தப் போரில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான மரியுபோலைக் கைப்பற்ற ரஷ்ய ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது. சமீபத்தில், 1,300 பேர் பதுங்கியிருந்த நாடக அரங்கின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், மரியுபோலில் உள்ள ஒரு ஓவியப் பள்ளி கட்டடத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நேற்று நடத்தியது. இந்தக் கட்டடத்தில், 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பாதுகாப்புக்காக பதுங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2) கார் டிரைவராக பணியாற்றும் முன்னாள் நிதி அமைச்சர்!
ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் உபேர் நிறுவனத்தின் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சராக செயல்பட்டவர் காலித் பயெண்டா. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இவர் நாட்டின் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “என்னால் இயன்ற விதத்தில் எனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக உழைக்கிறேன். அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறப்பட்டதால்தான் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைக்கு அமெரிக்காதான் காரணம்" எனத் தெரிவித்தார்.
3) சீனாவில் மலையில் மோதி விமானம் விபத்து!
சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு இன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 133 பேர் பயணித்தனர்.
விமானம் குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைபகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மலைமீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பெரும் தீ விபத்து எற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்றுள்ளனர். விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை என்ன ஆனது என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
4) இஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை!
இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, அரசு முறைப் பயணமாக ஏப்ரல் 2-ல் இந்தியா வருகிறார். இரு நாடுகள் இடையிலான உறவுகள் துவங்கி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இரு நாடுகள் இடையிலான தொழில்நுட்பம், பாதுகாப்பு, இணையம், விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது இப்பயணத்தின் நோக்கமாகும்.
5) இம்ரான் கான் பாராட்டு!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ''நாட்டு மக்களின் நலனுக்கானதாக, இந்தியாவின் வெளியுறவு கொள்கை உள்ளது'' என கூறியுள்ளார். எப்போதும் தனிப்பட்ட வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுவதற்காக இந்தியாவை பாராட்டுகிறேன். இந்தியா தற்போது அமெரிக்காவுடன் நல்ல நட்புடன் உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் அடங்கிய 'குவாட்' அமைப்பிலும் இந்தியா உள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா-வில் மூன்று தீர்மானங்கள் மீதான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா ஒதுங்கி இருந்தது. பொருளாதாரத் தடை விதித்துள்ள ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்குகிறது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. இதற்கு காரணம் நாட்டு மக்களின் நலனுக்கானதாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உள்ளது என்று அவர் பேசியுள்ளார்.