உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் 12வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்தப் போர் காரணமாக இதுவரை 15 லட்சம் உக்ரைன் நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
மேலும், கீவ், கார்கிவ், சுமி உள்ளிட்ட உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடுமையான தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இந்த தாக்குதல் காரணமாக ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். அதேபோல் ரஷ்ய வீரர்கள் தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் நாட்டுக்காக, உயிரையும் துச்சமென மதித்து உக்ரைன் ராணுவ வீரர்கள் நெஞ்சை நிமிர்த்து வல்லமை படைத்த ரஷ்ய படைகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கீவ் நகர எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள உக்ரைன் ராணுவ வீரர்கள் லெஸ்யா, வலேரியா ஆகியோர் சக ராணுவ வீரர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்கள் திருமணத்தில் அந்நகர மேயர் விட்டலி கிளிட்சோ பங்கேற்று திருமண ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். போர்க்களத்தின் மத்தியில் நடந்த இவர்களின் திருமண வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ராணுவ ஜோடிக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.