உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் 10 நாட்களுக்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், மீட்பு பணிகளுக்காக தற்காலிகமாகப் போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்தப் போர் காரணமாக லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் இருதரப்புக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் இந்த தாக்குதலில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். மேலும் கீவ் நகரத்தில் இருந்து தப்பிச் செல்லும்போது ஹர்ஜோத் சிங் என்ற மாணவருக்கு குண்டடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை வேகமாக மீட்க வேண்டும் என மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் உக்ரைன் சுமி பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், 'எங்களுக்குப் பயமாக உள்ளது. நாங்கள் நிறையக் காத்திருந்துவிட்டோம். இனி காத்திருக்க முடியாது. எங்களின் உயிரைப் பணயம் வைத்து நாங்கள் எல்லையை நோக்கி நகர்கிறோம். எங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அனைத்து பொறுப்பும் இந்தியத் தூதரகத்தையே சேரும்' என தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய ராணுவம் தற்காலிகமாகப் போரை நிறுத்தியுள்ள நிலையில் இந்திய மாணவர்களை உடனே மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.