உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக்கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. இந்நிலையில் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றனர்.
9 நாட்களாக நடைபெற்று வரும் இந்தப்போரால் இரு நாட்டைச் சேர்ந்த ஏராளாமானவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பொதுமக்களுக்கும் 20க்கும் மேற்பட்டோர் பலியானதாகக் கூறப்படுகிறது. அதில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் குண்டடிபட்டு உயிரிழந்தார்.
இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் கார்கிவ்வை விட்டு வெளியேற ரயில் நிலையம் சென்றபோது ரஷ்ய படையினரின் குண்டுவீச்சில் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அந்த சோகம் அகலுவதற்குள் மேலும் ஒரு இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் என்பவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
இது தொடர்பாக போலந்தின் ரிஸோ விமான நிலையத்திலிருந்து பேட்டியளித்த அமைச்சர் வி.கே.சிங், ”கீவ் நகரில் இந்திய மாணவர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளார். அவர் இப்போது சிகிச்சையில் இருக்கிறார். போரின்போது இதுமாதிரியான சம்பவங்களைத் தவிர்க்க முடியாது. துப்பாக்கி குண்டுக்கு மதமோ, தேசமோ தெரியாது. கீவ் நகரிலிருந்து இந்தியர்கள் வெளியேறுமாறு தொடர்ந்து தூதரகம் அறிவுறுத்தி வருகிறது. உக்ரைனில் இன்னும் 1,700 மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்பதே இலக்கு” எனத் தெரிவித்துள்ளார்.