உக்ரைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் ரஷ்ய படையால் குண்டு வீசி அழிக்கப்பட்டது. அண்டானோவ் AN 225 மிரியா என்ற இந்த விமானத்தின் மதிப்பு 300 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் 22 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.
இந்தப் போரால் உக்ரைன் நாட்டு மக்கள் 150க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், இரு தரப்பிற்கும் இடையே நடந்துவரும் மோதலில் 4,300 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ரஷ்யா தென்கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மேலும் இரண்டு நகரங்களைக் கைப்பற்றியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ரஷ்ய தாக்குதல் குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் தலைநகர் கீவ் நகர் அருகே உள்ள விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலகிலேயே மிகப்பெரிய விமானத்தை ரஷ்ய ராணுவம் அழித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில், "ரஷ்யா நமது மிரியா-வை அழித்திருக்கலாம். ஆனால் வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக ஐரோப்பிய அரசின் கனவை அவர்களால் ஒருபோதும் அழிக்க முடியாது. நாம் வெற்றி பெறுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய விமானமான AN-225 'Mriya' உக்ரைன் ஏரோநாட்டிக்கல் நிறுவனமான அன்டோனோவ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 'Mriya' என்றால் உக்ரைன் மொழியில் 'கனவு' என்றே பொருள்.
இந்த விமானம் கடந்த 1985ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 30 சக்கரங்கள், 6 இன்ஜின்கள், 290 அடி இறக்கைகளுடன் தயாரிக்கப்பட்ட இது உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் என்ற சிறப்பை பெற்றது.
இந்த விமானம் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு வெளியே உள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரஷ்ய ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் இந்த விமானம் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது.