உலக நாடுகளின் எதிர்ப்பைப் புறந்தள்ளி உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது நாளாகத் தாக்குதல் தொடுத்து வருகிறது. மேலும் உக்ரைன் தலைநகரான கீவ் நகரை ரஷ்ய ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் உக்ரைன் மக்கள் தங்களின் சொந்த நாட்டை விட்டு, கண்ணீருடன் வெளியேறி வருகின்றனர்.
மேலும் நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் இருக்கும் மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சுரங்கங்களில் தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்ய படைகள் முன்னேறிக்கொண்டே வருவதால் உக்ரைன் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள கர்ப்பிணிப் பெண் ஒருவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது உலக நாடுகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகரான கீவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் 23 வயது பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உக்ரைன் போலிஸார் உதவியுடன் அந்த பெண்ணுக்குப் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. இதில் அவர் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்த குழந்தைக்கு Mia என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதை அறிந்த உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தாய் மற்றும் குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி குழந்தை மியாவுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.