ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் மீதான தாக்குதலை நேற்று தொடங்கின. உக்ரைன் நாட்டில் உள்ள விமான தளங்கள், ராணுவ கிடங்குகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பல நகரங்களில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.
மேலும் தலைநகர் கீவில் ஊடுருவியுள்ள ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. எங்கு பார்த்தாலும் குண்டுமழை பொழிவதால், உக்ரைன் மக்கள் உயிர் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
பலர் பதுங்கு குழிகளில் பத்திரமாக தங்கியுள்ளனர். மேலும், கிழக்கு மற்றும் மத்திய உக்ரைனில் தாக்குதல் அதிகமாக இருப்பதால், மேற்கு எல்லையை நோக்கி பலர் சென்று கொண்டிருக்கிறார்கள்.
உக்ரைனில் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், 18 வயது முதக் 60 வயது வரையிலான ஆண்கள் எல்லையை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் ராணுவப் பணிகளில் ஈடுபட வேண்டும் என உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேநேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பான இடங்களுக்கு இடப்பெயர்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உக்ரேனிய தந்தை ஒருவர் மனைவி மற்றும் மகளை பத்திரமான இடத்துக்கு அனுப்புவதற்கான பேருந்தில் ஏற்றி வழியனுப்பி வைத்த உணர்ச்சிகரமான நிமிடங்களை வீடியோவாக சிலர் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டனர்.
தனது மகளுக்கு கண்ணீருடன் விடை கொடுத்த தந்தையின் உணர்வுப்பூர்வமான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.