ஆஸ்திரேலியா கண்டத்தின் வலது பக்கத்தில் தென் பசிபிக் கடலில் உள்ள தீவு தான் டோங்கா. இந்த டோங்கா தீவு, பழங்குடியின மக்கள் உட்பட ஒரு லட்சம் பேர் வசிக்கும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும்.
இந்தப் பகுதியில் உள்ள சில தீவுகளில் சிறு சிறு எரிமலைகள் உள்ளன. அவை அடிக்கடி சிறிய அளவில் வெடித்துச் சிதறும். அந்தவகையில் ஒரு தீவுக்கு அருகே கடல் பகுதியில் உள்ள எரிமலை ஒன்று கடந்த சனிக்கிழமை அதிகாலை திடீரென வெடித்துச் சிதறியது.
எரிமலை வெடிப்பின் காரணமாக சுனாமி அலை உருவாகி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் அலைகள் புகுந்தன. குறிப்பாக டோங்கா தலைநகர் நுகு அலோபா நகரில் சுமார் 3 அடி உயரத்தில் சுனாமிப் பேரலை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும் எரிமலை வெடித்துச் சிதறிய சிறிது நேரத்திலேயே வெளியான பெரும் புகை மற்றும் சாம்பல் வளிமண்டலத்தில் அடுக்குகளாக படிந்து கருமேங்கள் உருவானது. மேலும் இந்த எரிமலை வெடிப்பால் கடலுக்கு அடியில் செயல்பட்டு வந்த தகவல் தொடர்பு இணைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அப்பகுதியில் இருந்த மக்களுக்கு உணவும் குடிநீரும் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், வளிமண்டல காற்றும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் தகவல் சேகரிக்க சென்ற விமானங்கள் தடுமாறி வருகின்றன. அதேவேளையில், ஆஸ்திரேலியா விமானங்கள் சில பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று தகவல் சேகரித்து வருகின்றது.
மேலும் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், அப்பகுதி முழுவதும் சாம்பல் திட்டுக்களாக காட்சியளிக்கின்றன. இந்த எரிமலை வெடிப்பால் தற்போதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், முழுமையாக ஆய்வுக்குப் பிறகே உயிரிழந்தவர்களின் விவகரம் தெரியவரும் என டோங்கா அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், மீட்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியா மூலம் தேவையான உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி, தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.