அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் ரயில் நிலையத்தில் தினந்தோறும் சரக்கு ரயில்கள் வந்து செல்வது வழக்கம். இப்படி வரும் சரக்கு ரயில் பெட்டிகளை உடைத்து இதில் இருக்கும் பொருட்களைக் கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள், அமேசான் போன்ற விநியோகம் நிறுவன பொருட்களையே குறிவைத்துக் கொள்ளையடிக்கின்றனர். இதனால் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் பெரிதாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஆர்டர் செய்த பொருட்களைச் சரியான நேரத்திற்குக் கொடுக்க முடியாமல் இந்த நிறுவனங்கள் அவதிப்படுகின்றன. இந்த கொள்ளையர்கள் சரக்கு ரயில் பெட்டிகளை எளிதில் உடைத்து இதில் இருக்கும் பொருட்களை மிக எளிதாக கொள்ளையடித்துச் செல்கின்றனர்.
ரயில் தண்டவாளம் முழுவதும் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களில் காலி பார்சல் டப்பாக்கள் குவிந்து கிடக்கின்றன. 2020ம் ஆண்டை காட்டிலும் 2021ம் ஆண்டு இப்படியான கொள்ளை சம்பவங்கள் 350 % அதிகரித்துள்ளதாக யூனியன் பசிபிக் ரயில் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மேலும் 2021ம் ஆண்டில் மட்டும் இந்தத்திருட்டு சம்பவத்தால் 5 மில்லியனுக்கு மேல் சேத மதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருட்டு சம்பத்தைத் தடுக்க முடியாமல் காவல்துறையும், ரயில்வே துறையும் திணறி வருவதாக லாஸ் ஏஞ்செல்ஸ் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.