பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2020ல் கொரோனா ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டிருந்த காலத்தில் அவரே அதை மீறி தனது அரசு இல்லத்தில் நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்றார். அது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அச்செயலுக்கு தற்போது பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பல நாடுகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் கொரோனா தொற்றின் முதல் அலையின்போது, ஊரடங்கு அமலில் இருந்தது.
அப்போது ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், லண்டன் டவுனிங் வீதியில் உள்ள தனது அலுவலக கார்டனில் நடந்த மது விருந்தில் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளிவந்தன. இது அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தற்போது போரிஸ் ஜான்சன் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது பேசிய போரிஸ் ஜான்சன், “கொரோனா விதிகளை பின்பற்றிய, இறுதிச் சடங்குகளில் கூட பங்கேற்காத லட்சக்கணக்கான பிரிட்டன் மக்களுக்கு நான் மரியாதை கொடுக்கவில்லை. அவர்களுக்கும் இந்த சபைக்கும் எனது மனப்பூர்வ மன்னிப்பைக் கோருகிறேன்.” எனத் தெரிவித்தார்.
ஆனால், போரிஸ் ஜான்சனின் மன்னிப்பை எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மெர் ஏற்கவில்லை. போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என்று வர் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.