அழகியலுக்குப் பெயர் போனது துபாய். இங்கிருக்கும் கட்டிடங்களைப் பார்த்து ஆச்சரியப்படாதவர்களே இருக்க முடியாது. மேலும் சுற்றுலாவுக்கு என்றே பிரசித்தி பெற்ற இடம் என்பதால் சுற்றுலாப்பயணிகள் இங்கு வருவதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
துபாய் நகரம் எங்கும் துய்மையாகவும், அழகாகவும் இருக்கும். இந்த அழகை சிதைக்கக்கூடாது என்ற வகையில் துபாய் நகராட்சி குடியிருப்பு வாசிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் ஒன்றை விதித்துள்ளது. அது என்னவென்றால், வீட்டு பால்கனிகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தான வழிகாட்டு நெறிமுறைகளைத் துபாய் நகராட்சி வெளியிட்டுள்ளது.
இது குறித்து துபாய் நகராட்சி தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. அதில், "வீட்டு பால்கனியில் துணியைக் காயப்போடக் கூடாது, சிகரெட் துகள்களை பால்கனியில் இருந்து வெளியே வீசக் கூடாது.
பால்கனியில் இருந்து கும்பைகளை வீசக் கூடாது, பால்கனியை கழுவும்போது அந்த அழுக்கு தண்ணீர் வெளியே வரக்கூடாது, பறவைகளுக்கு பால்கனியில் உணவளிக்கக் கூடாது, பால்கனியில் தொலைக்காட்சி ஆண்டெனா மற்றும் டிஷ்களை மாட்டக்கூடாது என அறிவித்துள்ளது.
மேலும் இந்த விதிகளை மீறினால் ரூ.500 முதல் 1500 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் நகராட்சியின் இந்த அறிவிப்பு குடியிருப்பு வாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.