தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகின் எந்த இடத்தில் இருப்பவருடனும் இன்று நம்மால் பேச, பார்க்க முடிகிறது. இதுவே ஒரு 20 வருடங்களுக்கு முன்பு இந்த வசதி நமக்கு இல்லை.
அப்போது, நமக்கு SMS என்ற குறுஞ்செய்தி தொழில்நுட்பம்தான் வரப்பிரசாதமாக இருந்தது. இதைக்கொண்டுதான் நாம் மற்றவர்களிடம் மணிக்கணக்காக Text வாயிலாக உரையாடி வந்திருக்கிறோம். இந்தக் குறுஞ்செய்தி சேவைகளுக்கு பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வந்தன.
பின்னர் காலப்போக்கில், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற பல்வேறு சமூகவலைதளங்கள் வந்தவுடன் நம்மில் பலரும் SMS பயன்படுத்துவதை விட்டுவிட்டோம். தற்போது OTT எண்ணுக்காக மட்டுமே நமக்கு SMS பயன்பட்டு வருகிறது.
இத்தனை வருடத்தில் உலகன் முதல் SMS என்னவாக இருக்கும் என்று நாம் எப்போதாவது ஒருமுறை நினைத்துப் பார்த்திருக்கிறோமா? நம்மில் பலர் இப்படி நினைத்திருக்க வாய்ப்பில்லை.
வோடஃபோன் நிறுவனம்தான் முதன் முதலில் sms வடிவத்தை அறிமுகம் செய்தது. நெயில் பப்புவோர்த் என்பவர் தான் கணினி வழியாக ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவருக்கு sms அனுப்பினார். இந்த மெசேஜ் 1992ஆம் ஆண்டு அனுப்பப்பட்டதாகும்.
இதில் Merry Christmas என்று இருந்தது. இதுதான் உலகின் முதல் sms ஆகும். ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவர் வோடஃபோன் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாவார்.
இந்நிலையில் இந்த முதல் மெசேஜை ஏலம் விடப்போவதாக சில நாட்களுக்கு முன்பு வோடஃபோன் நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் இதில் கிடைக்கும் தொகை அகதிகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து நேற்று நடைபெற்ற ஏலத்தில் இந்த SMS ரூ.91 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது. ஏலத்தின் மூலம் கிடைத்த முழுத் தொகையும் ஐ.நா அகதிகள் முகமைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.