சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இன்னும் இந்த தொற்றிலிருந்து மீள முடியாமல், அதற்கான வழிகளை உலகம் தேடி வருகிறது. தற்போதைக்கு கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் விதமாகத் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுச் செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா வைரஸ், டெல்டா, டெல்டா பிளஸ் என அடுத்தடுத்து உருமாறிய கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தியது. அண்மையில் கூட AY.4.2 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளைப் பீதியடைய வைத்தது.
தற்போது மீண்டும் ஒரு உருமாறிய கொரோனா வைரஸ் ஆப்ரிக்கா நாடான போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றுக்கு B.1.1529 எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் ஸ்பைக் புரதத்தில் 32 மாற்றங்களைக் கொண்டுள்ளது என்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், உலக அளவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளை விட 60% ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ளது. டெல்டா கொரோனா பாதிப்பு காரணமாகவே பிரிட்டனில் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து, போலாந்து, செக் குடியரசு, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து உள்ளது. இதையடுத்து ஸ்லோவாக்கியா நாட்டில் இரண்டு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது உருமாறிய கொரோனா வைரலாஸ் மீண்டும் உலகம் முழுவதும் முடங்குமோ என்ற பதட்டம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.