அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் Nordstrom என்ற பிரபலமான சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் சனிக்கிழமையன்று இரவு 25 கார்களில், 80க்கும் மேற்பட்ட நபர்கள் முகமூடி அணிந்து உள்ளே நுழைந்தனர்.
பின்னர் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பொருட்களைக் கொள்ளையடித்த பிறகு வந்த காரிலேயே தப்பிச் சென்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் அறிந்து போலிஸார் வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து மூன்று பேர் மட்டுமே போலிஸாரிடம் சிக்கினர். இவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து கொள்ளையர்கள் காரில் தப்பிச் செல்லும் காட்சிகள் சி.சி.டி.வியில் வெளியாகியுள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு முன்புதான் சான்பிரான்சிஸ்கோவின் யூனியன் சதுக்கம் பகுதியில் உள்ள ஏராளமான கடைகளுக்குள் இதேபோல் கும்பல் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது. மேலும் கொள்ளையர்கள் காரில் தப்பிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.