சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இன்னும் இந்த தொற்றிலிருந்து மீள முடியாமல், அதற்கான வழிகளை உலகம் தேடி வருகிறது. தற்போதைக்கு கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா வைரஸ், டெல்டா, டெல்டா பிளஸ் என அடுத்தடுத்து உருமாறிய கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தியது. இந்நிலையில் AY.4.2 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளைப் பீதியடைய வைத்துள்ளது.
இந்த வைரஸ், கொரோனா டெல்டா வைரஸில் இருந்து பிரிந்து புதிதாக உருமாறியுள்ளது என்றும் 42 நாடுகளில் இவ்வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், "உருமாறிய கொரோனா AY.4.2 வைரஸ் குறித்துத் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வைரஸ் டெல்டா வைரஸில் இருந்து பிரிந்து புதிதாக உருவெடுத்துள்ளது.
AY.4.2 வைரஸ் தற்போது வரை 42 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 93% தொற்று பிரிட்டனில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் 4% கொரோனா தொற்று உலக அளவில் அதிகரித்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் AY.4.2 மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக கோவிட் 2 ஜீனோமிக் கன்சார்டியம் (INSACOG) என்ற அமைப்பு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.