சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இன்னும் இந்த தொற்றிலிருந்து மீள முடியாமல், அதற்கான வழிகளை உலகம் தேடி வருகிறது. தற்போதைக்கு கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாறிக் கொண்டே வருகிறது. அதேபோல் கொரோனா முதல், இரண்டாவது அலை என பரவி வருகிறது. இந்தியாவில் கூட மூன்றாவது அலை விரைவில் வரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள உள்மங்கோலியாவின் எஜின் நகரல் கொரோன டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் உள்மங்கோலியாவிற்குட்பட்ட 11 மாகாணங்களுக்கும் வைரஸ் பரவி உள்ளதால் பெய்ஜிங்கில் பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெளி மாகாணங்களில் இருந்து பெய்ஜிங் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பெய்ஜிங்கின் சாங்பீங் மாவட்டத்தில் உள்ள ஹாங்ஃபுயுவான் அதிக ஆபத்துள்ள பகுதி என வரையறுக்கப்பட்டு முற்றிலும் மூடப்பட்டுள்ளது. அங்கு 23 ஆயிரம் பேர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவிலும் குறைந்திருந்த தொற்று தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒரே நாளில் 35,660 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவி வருவது உலக நாடுகளைப் பீதியடையச் செய்துள்ளது.