உலகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் டேட்டிங் செயலிகள் பிரபலமடைந்து வருகின்றன. இந்தியாவிலும் டேட்டிங் ஆப் பற்றித் தெரியாத இளைஞர்கள் இருக்கமாட்டார்கள் என்ற நிலை உள்ளது. பெண்களிடம் பழகுவதற்கு ஒரு பாலமாக டேட்டிங் ஆப் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டேட்டிங் ஆப் மீது இழப்பீட்டுத் தொகை கேட்டு வழக்கு தொடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் செயல்படும் டேட்டிங் ஆப் ஒன்று, தங்களிடம் 25 முதல் 35 வரை வயதிலுள்ள பெண் பயனர்கள் நிறைய பேர் இருப்பதாக விளம்பரம் செய்துள்ளது. இதைப் பார்த்து இயன் கிராஸ் என்ற இளைஞர் இந்திய மதிப்பில் ரூ.7.5 லட்சம் செலுத்தி பயனாளராகச் சேர்ந்துள்ளார்.
இதற்கான அனுமதி கிடைத்தவுடன் இந்த டேட்டிங் ஆப்பிற்குச் சென்று பார்த்தபோது 5 பெண்கள் குறித்த தகவல்கள் மட்டுமே இருந்துள்ளன. இதனால் ஏமாற்றமடைந்த அந்த இளைஞர் டேட்டிங் ஆப் மீது நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடுத்துள்ளார்.
இந்த புகாருக்கு அந்த டேட்டிங் ஆப் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் புதிய பயனர்களை உடனடியாக நாங்கள் அனுமதிக்க முடியாது, அவர்கள் குறித்து விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே முழுமையாக அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது. டேட்டிங் ஆப் மீது இளைஞர் மோசடி வழக்கு தொடுத்திருப்பது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.