வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் ஃபேரோ தீவு உள்ளது. இந்த தீவில் கடந்த ஞாயிறன்று பாரம்பரிய திருவிழா என்ற பெயரில் கடற்கரையில் 1,428 டால்பின்கள் கொன்று குவிக்கப்பட்ட சம்பவம் உலக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்தத் தீவில் கிரின்டாட்ராப் (Grindadrap) என்ற பெயரில் பாரம்பரியமாக ஒவ்வொரு ஆண்டும் இப்படி டால்பின்களை வேட்டையாடுவதை இப்பகுதி மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதன்படி கடந்த ஞாயிறன்று படகுகளில் சென்று டால்பின்களை பிடித்து கரைக்குக் கொண்டு வந்து அவற்றின் கழுத்துப் பகுதியை அறுத்து கொலை செய்துள்ளனர். இப்படி 1,428 டால்பின்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டதால் கடற்கரைப் பகுதி நீர் முழுவதும் சிவப்பு நிறமாகக் காட்சியளித்தது.
டால்பின்கள் கொன்று குவிக்கப்பட்ட காட்சிகளை இணையத்தில் பார்த்து உலக மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த மூடப் பழக்கத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான டால்பின்கள் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் உள்ள விலங்கு ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனங்கள் எப்போதுதான் முற்றுப்பெறுமோ என்று வேதனை தெரிவித்துள்ளனர்.